Published : 21 Dec 2019 07:59 AM
Last Updated : 21 Dec 2019 07:59 AM
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் தாக்கல்செய்யப்பட்ட இரு மனுக்களை தள்ளுபடி செய்து அமர்வின் உறுப்பினர்கள் நேற்று உத்தரவிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நெடுவாசல் பாசன விவசாயிகள் நலச் சங்கம் சார்பில், நெடுவாசல் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தடைவிதித்து, அப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கக் கோரி, தேசிய பசுமைதீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் கடந்த 2017-ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞராக மதிமுக பொதுச்செயலர் வைகோ பங்கேற்று வாதிட்டு வந்தார்.
மேலும், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு, தேவையான நீராதாரம் இருக்கிறதா என நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையிலேயே திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான நடிகர்விஷாலும் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த அமர்வு, ஓஎன்ஜிசி, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
சுற்றுச்சூழல் அனுமதி இல்லை
அப்போது, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்தியபெட்ரோலியத் துறை அமைச்சகத்துடன், வருவாய் பங்கீட்டு அடிப்படையில் ஒப்பந்தம் செய்திருந்த ஜெம் லேபாரட்டரிஸ் நிறுவனம் பணிகளை தொடங்கவில்லை. உரிய அனுமதி பெற்றபின்னரே பணிகள் தொடங்கப்படும் என்று ஜெம் நிறுவனம் மற்றும்மத்திய அரசு சார்பில் தெரிவிக் கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட அமர்வின் உறுப்பினர்கள், இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி இன்னும் பெறவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் போது, அதை எதிர்த்து மனுதாரர்கள் வழக்கு தொடரலாம். எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று உத்தர விட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT