Published : 21 Dec 2019 07:34 AM
Last Updated : 21 Dec 2019 07:34 AM

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி வழக்கமான அளவை எட்டிய வடகிழக்கு பருவமழை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 44 செ.மீ. பதிவு

சென்னை

இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே அறிவித்தபடி வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கமாக பெய்யும் அளவான 44 செமீ மழை அளவை எட்டியது. இனிவரும் நாட்களில் பெய்யும் மழை அனைத்தும் கூடுதல் மழைதான்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தை வடகிழக்குப் பருவமழைக் காலமாக இந்திய வானிலை ஆய்வு மையம் வரையறுத்துள்ளது. பல நேரங்களில் அக்டோபர் 18-ம் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கி உள்ளது. டிசம்பர் 15-ம் தேதி வாக்கில் விலகி, மார்கழி மாத பனிப் பொழிவு தொடங்கும். சில நேரங்களில் ஜனவரி மாதம் வரைகூட மழை நீடிக்கும்.

இரு துருவ நிகழ்வு

சோமாலியா நாட்டை ஒட்டிய கடற்பகுதியில் வழக்கத்தைவிட வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்தும், இந்தோனேசிய நாட்டை ஒட்டிய கடல் பகுதியில் வழக்கத்தைவிட 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைந்தும் இருக்கின்ற வானிலை நிகழ்வை, ‘இந்தியப் பெருங்கடலின் சாதகமான இரு துருவ நிகழ்வு’ (Positive Indian Ocean Dipole) என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வின்போது தமிழகத்துக்கு வடகிழக்குப் பகுதியில் இருந்து தென்மேற்குப் பகுதியை நோக்கி அதிக அளவில் காற்று வீசும். அப்போது கூடுதலான ஈரப்பதத்துடன் தமிழகம் நோக்கி வருவதால், அதிக அளவில் மழை கிடைக்கும். இதுநாள் வரையிலான வானிலை தரவுகளின்படி, இந்த சாதகமான நிகழ்வு ஏற்படும்போது தமிழகத்தில் வழக்கமான மழை அளவு அல்லது அதைவிட அதிக மழை தொடர்ந்து பதிவாவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு சாதகமான நிகழ்வு ஏற்பட்டபோதும், வழக்கமான அளவை விட அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை குறைவாகவே இருந்தது. இது உலக வானிலை ஆய்வாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் வழக்கமாக பெய்யும் மழை அளவான 44 செமீஅளவை கடந்த 15-ம் தேதி எட்டியது.

இதன்மூலம், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்குப் பருவமழை வழக்கமான அளவை ஒட்டி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கமான அளவை எட்டியுள்ளது.

கடந்த 15-ம் தேதி நிலவரப்படி, நீலகிரி மாவட்டத்தில் 78 செமீ மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 74 சதவீதம் அதிகம். அதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் (74 செமீ) 60 சதவீதம் அதிகமாகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் (65 செமீ) 52 சதவீதம் அதிகமாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் (51 செமீ) 39 சதவீதம் அதிகமாகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் (53 செமீ) 36 சதவீதம் அதிகமாகவும், கோவை மாவட்டத்தில் (44 செமீ) 35 சதவீதம் அதிகமாகவும் மழை பதிவாகியுள்ளது.

அதேநேரம், புதுச்சேரியில் (57 செமீ) வழக்கத்தை விட 29 சதவீதம் குறைவாகவும், வேலூர் (34 செமீ), பெரம்பலூர் (32 செமீ) ஆகிய மாவட்டங்களில் தலா 24 சதவீதம் குறைவாகவும், மதுரை மாவட்டத்தில் (30 செமீ) 21 சதவீதம் குறைவாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் (34 செமீ) 20 சதவீதம் குறைவாகவும், சென்னையில் (60 செமீ) 13 சதவீதம் குறைவாகவும் மழை கிடைத்துள்ளது. மொத்தத்தில் சுமார் 20 மாவட்டங்களில் வழக்கத்தைவிட மழை குறைவாக பெய்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை வழக்கமான அளவை எட்டியுள்ளது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:

கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 30 செமீ மட்டுமே மழை பெய்திருந்தது. இதனால் வழக்கமான மழை அளவை எட்டுமா என்ற அச்சம் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது வழக்கமான அளவான 44 செமீ மழை அளவை எட்டியுள்ளது. இதற்கு இந்தியக் கடல் பகுதியின் சாதகமான இரு துருவ நிகழ்வும் ஒரு காரணம்.

பருவமழை நிறைவடைய இன்னும் 10 நாட்கள் உள்ளன. இனிவரும் நாட்களில் கிடைக்கும் மழை அனைத்தும், கூடுதல் மழைதான். சில மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகமாகவும், சில மாவட்டங்களில் குறைவாகவும் மழை பெய்வது வழக்கமான ஒன்றுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x