Published : 21 Dec 2019 07:30 AM
Last Updated : 21 Dec 2019 07:30 AM
சென்னை புத்தக காட்சி ஜனவரி 9 முதல் 21-ம் தேதி வரை நந்தனம்ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறஉள்ளது. இதில் 2 கோடி புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தக காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 43-வது புத்தக காட்சி ‘கீழடி-ஈரடி’ என்ற தலைப்பில் ஜனவரி 9 முதல் 21-ம் தேதி வரை சென்னைநந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான சின்னம், ஹேஷ்டேக் ஆகியவற்றை பபாசி நிர்வாகிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சென்னை புத்தகக் காட்சியில் 700-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் 15 லட்சம் தலைப்புகளில் 2 கோடி புத்தகங்கள் இடம்பெறும். தினமும் மதியம் 3 முதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 9 மணி வரையும் கண்காட்சி நடைபெறும். நுழைவுக் கட்டணம் ரூ.10. இணையதளம் வழியாகவும் நுழைவுச்சீட்டு பெறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. அவர்களுக்கான அனுமதிச்சீட்டு கல்வி நிறுவனங்களிடம் வழங்கப்படும். மேலும், மெட்ரோ ரயில் மூலம் கண்காட்சிக்கு வருபவர்கள் பயண அட்டையை காண்பித்து இலவச அனுமதி பெறலாம்.
இந்த புத்தகக் காட்சியில் தொல்லியல் துறையின் உதவியோடு கீழடி அகழாய்வு தொடர்பான அரங்கம் அமைக்கப்பட உள்ளது. மேலும், கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள்வழங்கப்படும். இளம் இயக்குநர்களின் குறும்படம், ஆவணப்படங்களும் தனி அரங்குகளில் திரையிடப்படும்.
பல்வேறு அம்சங்கள்
வாகனம் நிறுத்தும் இடம், குடிநீர், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள், ஓய்வறை, உணவகங்கள், வண்ண குறியீடுகள் மூலம் அரங்குகளை வகைப் பிரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளன.
புத்தகக் காட்சி நடைபெறும் காலத்தில் பொங்கல் விடுமுறை உள்ளிட்ட 8 நாட்கள் விடுமுறை தினங்களாக இருப்பதால் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
முன்னதாக புத்தக வாசிப்பை வலியுறுத்தி 5 ஆயிரம் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் புத்தகங்கள் படிக்கும் ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி ஜனவரி 6-ம் தேதி ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின்போது பபாசி செயலாளர் எஸ்.கே.முருகன், பொருளாளர் ஆ.கோமதிநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT