Published : 20 Dec 2019 07:38 PM
Last Updated : 20 Dec 2019 07:38 PM
பெண் வார்டுகளாக மாற்றப்பட்ட உள்ளாட்சிகளில் முன்னாள் பிரதிநிதிகள் பலரும் தங்கள் மனைவியை போட்டியிடச் செய்துள்ளனர்.
வாக்காளர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் மனைவியின் பெயருடன் தங்கள் பெயரையும், புகைப்படத்தையும் துண்டுபிரசுரங்களில் இடம்பெறச் செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தல் வரும் 27ம் தேதி ஆண்டிபட்டி, க.மயிலாடும்பாறை ஒன்றியங்களில் நடைபெற உள்ளது. அடுத்தகட்டமாக 30ம் தேதி மீதம் உள்ள 6 ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு கட்சி சின்னங்களும், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பற்ற சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட தேர்தலுக்கு குறைவான நாட்களே இருப்பதால் சின்னம் ஒதுக்கப்பட்டதும் கிராமப்புறங்களில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரப் பணிகளில் சுறுசுறுப்படைந்துள்ளனர்.
பலரும் துண்டுபிரசுரம், போஸ்டர் உள்ளிட்டவற்றிற்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். பெரும்பாலான பெண் வேட்பாளர்கள் தம்பதியராக இருக்கும் படங்களையே பிரின்ட் செய்து வருகின்றனர். உள்ளாட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட பகுதியில் போட்டியிட ஆர்வமாக இருந்த ஆண் வேட்பாளர்களுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதனால் பலரும் தங்கள் மனைவி மற்றும் பெண் உறவுகளை களத்தில் இறக்கி உள்ளனர். இதுவரை வார்டுகளில் பொதுச்சேவை, சமூகப்பணி என்று இருந்த ஆண்களின் முகம் பரிட்சயமாக இருந்தது. தற்போது இவர்களின் மனைவி உள்ளிட்டோர் தேர்தலில் களம் இறங்கியுள்ளதால் வாக்குகள் மாறிவிடக் கூடாது என்பதற்காக இருவரதுபடத்தையும் இணைத்து துண்டுபிரசுரங்கள், போஸ்டர்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் பெண்களின் பெயருக்குப் பின்னால் கணவர் பெயரையும் இணைத்து வேட்பாளரின் பெயரை வாக்காளர்களின் மனதில் பதியவைப்பதற்கான யுக்தியையும் கையாண்டு வருகின்றனர்.
பலரும் இதே முறையைப் பின்பற்றுவதால் பெண்கள் வார்டுகளின் பிரசார துண்டு பிரசுரங்களில் தம்பதியர் படங்களே அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT