Published : 20 Dec 2019 05:08 PM
Last Updated : 20 Dec 2019 05:08 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வரும் 23-ம் தேதி திமுக தலைமையில் சென்னையில் நடைபெறும் பேரணியில் விசிகவினர் கலந்துகொள்ள வேண்டும் என, அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (டிச.20) வெளியிட்ட அறிக்கையில், "குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எழுந்துள்ள போராட்டங்களை வன்முறை மூலமாக ஒடுக்குவதற்கு பாஜக அரசு முனைந்திருக்கிறது. கர்நாடகாவின் மங்களூரு பகுதியில் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டிருக்கிறது. இது அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் பாசிச போக்கு ஆகும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் தொடர்ந்து பாஜக அரசு வன்முறையை ஏவிக் கொண்டிருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் மிருகத்தனமாக மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டிருக்கிறது. இணைய சேவை என்பது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று கேரள உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கி இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். இதில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
கர்நாடகாவின் மங்களூருவில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி இருக்கிறது. அதில் ஜலீல், நவ்ஷீன் என இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை மூலம் முஸ்லிம்களை படுகொலை செய்யும் பாஜக அரசின் அடக்கு முறையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். பொதுமக்களின் உணர்வை மதித்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
மக்கள் விரோத குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகளின் சார்பில் எதிர்வரும் 23 ஆம் தேதி திங்கள்கிழமை சென்னையில் நடைபெற உள்ள பேரணியில் விடுதலைச் சிறுத்தைகள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றுப் பேரணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT