Published : 20 Dec 2019 04:56 PM
Last Updated : 20 Dec 2019 04:56 PM

அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்க முடிவு? தமிழக மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கான வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும்; தினகரன்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்

சென்னை

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது நன்மை தராது என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று (டிச.20) வெளியிட்ட அறிக்கையில், "பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மொத்தமாக மத்தியப் பட்டியலுக்கு மாற்றும் விதமாக உயர்கல்வி நிறுவனங்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் மத்திய அரசின் முயற்சியை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள 21 பல்கலைக்கழகங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசு பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படுகிற கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகள் ஆகியவை இனிமேல் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும்.

இதன் மூலம் கல்வித் தரத்தில் மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடும்போது இப்போது முன்னணியில் இருக்கும் தமிழகம் பெரிய அளவுக்கு பாதிப்பைச் சந்திக்கும் ஆபத்து உள்ளது.

நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான வாய்ப்பு குறைந்தது போலவே, இந்த நடவடிக்கையின் மூலம் தமிழக மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும். மேலும் தமிழ்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டு, கடைநிலை ஊழியர்கள் தொடங்கி துணைவேந்தர் நியமனம் வரை வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளும் ஏற்படும்.

இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று தமிழக அரசு செயல்படுவது சரியானது அல்ல. இதன் மூலம் பாரம்பரியமிக்க அண்ணா பல்கலைக்கழகம் மதிப்பினை இழந்துவிடும்.

எனவே, பல்கலைக்கழகங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு திட்டவட்டமாக எதிர்க்க வேண்டும். சட்டரீதியாக தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அதன்படி செயல்படவும் வேண்டும். மேலும் தேசிய அளவில் இத்தகைய பாதிப்பைச் சந்திக்கும் மற்ற மாநில அரசுகளுடன் ஒன்று சேர்ந்து இந்நடவடிக்கையில் இருக்கும் சிக்கல்களை மத்திய அரசுக்குத் தெளிவுபடுத்துவதற்கான பணிகளையும் செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

எந்தச் சூழ்நிலையிலும் தமிழக மாணவர்களுக்கான உயர்கல்வியும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் இதனால் பாதிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது" என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x