Last Updated : 20 Dec, 2019 04:20 PM

 

Published : 20 Dec 2019 04:20 PM
Last Updated : 20 Dec 2019 04:20 PM

'வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்க வாய்ப்பு; என் வழக்கறிஞர்களையும் அனுமதியுங்கள்': வேட்பாளரின் மனு தள்ளுபடி

மதுரை

உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள், முகவர்களுடன் வழக்கறிஞர்களும் இருக்க அனுமதி வழங்கக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை கள்ளிக்குடி ஒன்றிய திமுக செயலர் எஸ்.ராமமூர்த்தி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு டிச. 30-ல் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய வாக்காளர்கள் நான்கு பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு வேட்பாளர்களும் அவர்களின் முகவர்களும் அனுமதிக்கப்படுவர். அவர்களும் ஓட்டுப்பெட்டியில் உள்ள சீல் அகற்றும் வரை தான் உள்ளே இருக்க அனுமதிக்கப்படுவர்.

சீல் அகற்றப்பட்ட பிறகு வாக்குச்சீட்டுகளை பிரிக்க வேண்டும் என்று கூறி அனைவரையும் அங்கிருந்து வெளியே அனுப்பிவிடுகின்றனர். ஓட்டுகள் பிரிக்கப்பட்ட பிறகு அவசரம் அவசரமாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு முடிவுகள் அவசரமாக அறிவிக்கும் போது பல்வேறு தவறுகள் நடைபெறுகின்றன.

இந்தத் தேர்தலில் குராயூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். தலைவர் தேர்தலில் நான் வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் ஓட்டு எண்ணிக்கையின் போது அதிகாரிகள் ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு நான் தோல்வி அடைந்ததாக அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன.

எனவே குராயூர் ஊராட்சி தலைவர் மற்றும் 13 ஊராட்சி உறுப்பினர்கள் தேர்தலின் பதிவான ஓட்டுகளை எண்ணும் போது எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கும் வரை வழக்கறிஞர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு செய்யவதால் ஓட்டு எண்ணிக்கை முறைகேடுகள் எதுவும் இல்லாமல் நியாயமாக நடைபெற வாய்ப்புள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு டிச.7-ல் மனு அனுப்பினோம்.

இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய தேர்தலில் பதிவாகும் ஓட்டுகளை எண்ணும் மையத்தில் ஓட்டு எண்ணிக்கை முதல் முடிவு அறிவிக்கும் வரை வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் வழக்கறிஞரும் உடனிருக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் சார்பில் ஓட்டு எண்ணிக்கையின் போது வழக்கறிஞர்களை அனுமதிக்க விதியில் இடமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x