Published : 20 Dec 2019 04:06 PM
Last Updated : 20 Dec 2019 04:06 PM

உள்ளாட்சி தேர்தல் சுவாரஸ்யம்: சின்னம் வரைய சுவர் ஓவியர்களுக்கு கிராக்கி; பிளக்ஸ் பேனர் தடையால் விடிவு பிறந்துள்ளதாக மகிழ்ச்சி

திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டி கிராமத்தில் சின்னம் வரையும் ஆர்டிஸ்ட் தொழிலாளிகள். | படங்கள்: பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்

பிளக்ஸ் பேனர்கள் தடையால் தங்களுக்கு விடிவு பிறந்துள்ளது என உள்ளாட்சி தேர்தலில் சின்னம் வரையும் ஆர்டிஸ்ட்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு உள்ளாட்சி தேர்தல்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்து பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர்கள் தற்போது எங்களை தேடிவருகின்றனர் என்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுக்கள், பரிசீலனை, தள்ளுபடி, வாபஸ், சின்னம் ஒதுக்கீடு ஆகிய நிகழ்வுகள் நடந்துமுடிந்த நிலையில் தற்போது வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

முதற்கட்டமாக சுவர்களில் சின்னங்கள் வரையும் பணி கிராமப்புறங்களில் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் பிளக்ஸ் பேனர்கள் முக்கிய இடம் பிடித்தன. இதனால் பிளக்ஸ் பிரிண்டிங் தொழில் செய்தவர்களுக்கு வருவாய் கிடைத்தது.

ஆர்டிஸ்ட்களை சுவர்களில் சின்னம் வரைய அழைக்கப்படவில்லை. தற்போது பிளக்ஸ் பேனர்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் பழைய முறைப்படி சுவர்களில் சின்னம் வரையத்தொடங்கியுள்ளனர் கிராமப்புற வேட்பாளர்கள்.

இதனால் ஆர்டிஸ்ட்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. சின்னங்கள் வரையும் ஆர்டிஸ்ட் களைத் தேடிப்பிடித்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சம்பளம் தருகிறோம் எனக்கு வரைந்து கொடுங்கள் என தங்கள் சின்னங்களை வரைவதில் கிராம ஊராட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஆர்வம் காட்டி பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்திவருகின்றனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள தோட்டனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டோ சின்னம் வரைந்துகொண்டிருந்த ஆர்டிஸ்ட் அகஸ்டின் இந்து தமிழ் செய்தியாளரிடம் கூறியதாவது:

இதுபோன்று சின்னம் வரையும் வேலைக்கு வந்து 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. கடந்த இரண்டு முறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் எங்களை வேட்பாளர்கள் அழைக்கவில்லை. பிளஸ்க் பேனர்கள் வைத்து தங்கள் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டனர். தற்போது என்னைப்போன்ற ஆர்டிஸ்ட்களை தேடிப்பிடித்து அழைத்துச்சென்று வேலைகொடுக்கின்றனர்.

ஆர்டிஸ்ட் வேலை தற்போது கிடைப்பதில்லை என்பதால் நான் வெள்ளையடிக்கசெல்வது, எலக்ட்ரீசியன் வேலை என கிடைத்தவேலையை செய்துவருகிறேன். 13 ஆண்டுகளுக்கு பிறகு எனது ஆத்மார்த்தவேலையான இந்த ஆர்டிஸ்ட் வேலை கிடைத்ததில் எனக்கு சந்தோசம். நான் அனுபவித்து ஆர்வமுடன் பார்க்கும் வேலை. தற்போது தேர்தலுக்கு பல ஊர்களில் கூப்பிட்டாலும் ஒரு ஊராட்சிக்கு வேலைசெய்யவே நாட்கள் போதாது காரணம், பிரச்சாரத்திற்கான கால அவகாசம் இரண்டு வாரங்களுக்கு மேல் வேட்பாளர்களுக்கு கிடைத்தது. தற்போது நேற்று தான் சின்னம் கிடைத்தது. ஒரு வாரத்திற்குள் தேர்தல் என்பதால் அதிக வேலைகளை ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஓரிரண்டு ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் தான் சின்னம் வரைந்துகொடுக்க முடியும்.

அதுவும் கஷ்டமான ஆட்டோ சின்னத்தை கொடுத்துவிட்டனர். நான் அவுட்லைன் படம் வரைய என்னுடன் இருவர் அதற்கு கலர் கொடுக்கின்றனர். ஒரு சின்னம் வரைய ரூ.500 வரை கூலியாக நிர்ணயித்துள்ளோம். அப்போது தான் மூன்று பேருக்கு கூலி கட்டுபடியாகிறது. இரவு பகல் பாராமல் சின்னம் வரைந்தால் தேர்தல்காலத்தில் ஏதோவருவாய் பார்க்கமுடியும். பிளக்ஸ் பேனர் தடை என்னைப்போன்ற ஆர்டிஸ்ட்கள் தொழிலை மீண்டும் வாழவைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x