Published : 20 Dec 2019 04:35 PM
Last Updated : 20 Dec 2019 04:35 PM
இலங்கைத் தமிழர்களுக்கான இரட்டைக் குடியுரிமை என்றால் என்ன என்ற அடிப்படையே தெரியாமல் அதனை வலியுறுத்துவதாக முதல்வர் பழனிசாமி சொல்கிறார் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.20) சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அந்நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:
"முஸ்லிம்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் துரோகம் விளைவிக்கும் வகையிலான குடியுரிமை திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் 11 பேரும், பாமகவின் உறுப்பினர் ஒருவரும் என மொத்தம் 12 பேரும் ஆதரித்திருக்கின்றனர். அவர்கள் எதிர்த்து ஓட்டு போட்டிருந்தால் இந்தச் சட்டத்தை அப்பொழுதே நாம் முறியடித்திருக்க முடியும்.
அதனால் தான், இன்றைக்கு இந்தியாவே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இச்சட்டத்தை எதிர்த்து வரும் 23-ம் தேதி சென்னையில் மிகப்பெரிய பேரணியை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அந்தப் பேரணிக்கும் இந்த மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்தகட்டப் போராட்டத்தை மிக விரைவில் நடத்துவோம். ஏற்கெனவே திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளுடன் கலந்து பேசி முடிவெடுத்து இதை அறிவித்து இருக்கிறோம்.
அடுத்தகட்டமாக அனைத்துக் கட்சிகளையும் அழைக்கப் போகிறோம். யார் யார் வருகிறார்களோ அவர்கள் அனைவரும் வாருங்கள் என்று எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசி முடிவெடுத்து ஒரு மிகப் பெரிய போராட்டத்தை இதுவரை தமிழகமே சந்தித்திருக்காத வகையில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.
ஏனென்றால், இது நமக்கு இருக்கக்கூடிய உரிமை. இலங்கையில் உயிரிழந்து கொண்டிருக்கும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வரும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள், அங்கு இருக்கும் தமிழர்கள், அதேபோல் இங்கு வந்து குடியேறி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கக் கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக இன்றைக்கு நாம் இருந்தாக வேண்டும்.
முதல்வர் பழனிசாமி நேற்று டெல்லியில் அளித்த பேட்டியில் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமையை நாங்கள் வலியுறுத்துவோம் என்று சொல்கிறார். இரட்டைக் குடியுரிமை என்றால், இரட்டைக் குடியுரிமை என்பது "இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கையில் ஒரு குடியுரிமை", "இந்தியாவில் ஒரு குடியுரிமை" என்பதுதான். இதைத்தான் இரட்டைக் குடியுரிமை என்று சொல்கிறோம். அதை வலியுறுத்துவோம் என்று சொல்கிறார். எப்படி வலியுறுத்த முடியும் என்று கேட்கிறேன். இப்போது நிறைவேற்றியிருக்கும் சட்டத்தில் அது இடம்பெற்று இருக்கிறதா?
இந்த சராசரி அறிவு கூட ஒரு முதல்வருக்கு இல்லையே! ஏதோ புத்திசாலி போல, எல்லாம் தெரிந்த அறிவாளி போல் இப்படிச் சொல்கிறார் என்றால் இதைவிட வெட்கக்கேடு வேறு என்ன இருக்க முடியும்?
திமுக பொய் சொல்லித்தான் தேர்தலில் ஓட்டு வாங்கி வெற்றி பெற்றதாம். இப்போது போராட்டத்திற்காக மக்களிடம் பொய் சொல்லிக் குழப்பத்தை ஏற்படுத்துவதாக தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கிறார். யார் பொய் சொல்கிறார்கள்? யார் மக்களுக்காகப் பாடுபடுகிறார்கள்? என்பது விரைவில் தெரியத்தான் போகிறது".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT