Published : 20 Dec 2019 02:58 PM
Last Updated : 20 Dec 2019 02:58 PM
திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டாரத்தில் சமீபத்தில் பெய்த மழையால் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து பயிர்கள் நாசமாகிவிட்டன.
இதற்கு இழப்பீடு மற்றும் காப்பீட்டு தொகை கேட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேதமடைந்த பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் முறையிட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின்போது மானூர் வட்டாரம் அழகியபாண்டியபுரம் அருகே செட்டிகுறிச்சி பகுதியில் விவசாயிகள் பலர் 50 ஏக்கரில் உளுந்து பயிரிட்டிருந்தனர்.
65 நாள் பயிரான உளுந்து விதைக்கப்பட்டு அறுவடை செய்யும் தருவாயில் பருவ மழை பெய்து 50 ஏக்கரிலும் உளுந்து பயிர்கள் நாசமாகிவிட்டன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தியாகராஜன், சிவபெருமாள் ஆகியோர் சேதமடைந்த உளுந்து பயிர்களை எடுத்துவந்து ஆட்சியரிடம் காண்பித்தனர்.
தங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளில் ஒருசிலர் மட்டுமே காப்பீடு செய்துள்ளனர். பயிர் பாதிப்பு குறித்து கணக்கீடு செய்து உரிய காப்பீட்டு தொகை கிடைக்க செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, உளுந்து பயிரிட்டிருந்த ஒருசில விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.240 என்று காப்பீட்டு தொகை செலுத்தியிருக்கிறோம். ஒரு ஏக்கருக்கு இழப்பீடாக ரூ.15500 வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.
சேத விவரங்களை கணக்கிட்டு இழப்பீட்டு தொகை கிடைக்க செய்ய வேண்டும் என்று ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். உளுந்து பயிருக்கு காப்பீடு செய்ய குறுகிய கால அவகாசமே அளிக்கப்பட்டிருந்ததால் பல விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தில் தொகை செலுத்தமுடியவில்லை. காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT