Published : 20 Dec 2019 02:52 PM
Last Updated : 20 Dec 2019 02:52 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் 2019-2020-ல் நெற் பயிருக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் காப்பீடு செய்த 4537 விவசாயிகளுக்கு ரூ.1.41 கோடி இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் பேசியதாவது:
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 2019-2020-ல் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் நெற்பயிருக்கு காப்பீடு செய்து, விதைக்க இயலாமல்போன 7347 விவசாயிகளுக்கு ரூ.2.28 கோடி இவ்வாண்டு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் காப்பீடு செய்த 4537 விவசாயிகளுக்கு ரூ.1.41 கோடி இம்மாத இறுதியில் வழங்கப்படவுள்ளது. ரசாயான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார உர விற்பனை நிலையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
உர விற்பனையை கண்காணிக்க வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெற்பயிரில் இலைசுருட்டுப்புழு மற்றும் ஆனை கொம்பன் பூச்சியை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 230 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இம்மாதம் வரை 1279 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
இதில் 1179-க்கு முடிவுகள் பெறப்பட்டுள்ளது. இவற்றுள் 23 மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதை விற்பனையாளர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆய்வின்போது தரக்குறைவான விதைகள் 41.3 மெட்ரிக் டன் விற்பனைக்கு வைக்கப்பட்டது கண்டறியப்பட்டு தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.23.21 லட்சமாகும் என்று தெரிவித்தார்.
இதை தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினர். நெற்பயிருக்கு காப்பீடு செய்ய காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த ஆட்சியர், ஏற்கெனவே இருமுறை காலநீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது.
விவசாயிகளின் கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார். களக்காடு வட்டாரத்தில் திருக்குறுங்குடி மற்றும் ஏர்வாடி பகுதிகளில் கடந்த 2016-2017-ம் ஆண்டுக்கான நெற்பயிர் காப்பீடு தொகை செலுத்தப்பட்டது. வறட்சியால் நாற்றங்கால்கள் கருகிவிட்டன. தமிழக அரசும் வறட்சி நிவாரணம் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
ஆனால் இதுவரை 460 விவசாயிகளுக்கு காப்பீடு, இழப்பீடு தொகை கிடைக்கவில்லை என்று விவசாய பிரதிநிதி பி. பெரும்படையார் முறையிட்டார்.
இதுபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகள் சிலருக்கு கிடைக்காமல் இருப்பது குறித்து விவசாயிகள் தெரிவித்தனர். விடுபட்ட விவசாயிகளுக்கு காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பதில் தெரிவித்தார்.
வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளில் உள்ள முன்னேற்றம் குறித்த விவசாயிகளின் கேள்விக்கு பதில் அளித்த ஆட்சியர், இதில் 4-ம் கட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியிருப்பதாக கூறினார்.
மானூர் அருகே வாகைகுளம் கூட்டுறவு சங்கத்தில் யூரியாவை தவிர வேறு உரங்கள் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கூட்டத்தில் ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். அடுத்த ஆண்டு மேலும் அதிகமான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் திருநெல்வேலி சார் ஆட்சியர் மணீஷ் நாரணவரே, வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணபிள்ளை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
45 நிமிடத்தில் முடிந்த கூட்டம்:
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்படும் வரை இந்த கூட்டத்துக்கு வரும் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கூட்ட அரங்கினுள் அமர இடமின்றி விவசாயிகள் பலரும் நின்றுகொண்டிருப்பார்கள்.
ஆனால் இன்றைய கூட்டத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. கூட்ட அரங்கினுள் இருக்கைகள் காலியாக இருந்தன.
திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டம் பிரிந்தபின் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு தென்காசி மாவட்ட பகுதி விவசாயிகள் வராததால் கூட்டம் குறைந்திருந்தது.
வழக்கமாக காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்குமேலும் விவசாயிகள் கூட்டம் நீடிக்கும். ஆனால் இன்றைய கூட்டம் 45 நிமிடத்தில் முடிவடைந்தது. விவசாயிகள் தரப்பிலும் பெரிய அளவுக்கு பிரச்சினைகள் எழுப்பப்படவில்லை.
...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT