Published : 20 Dec 2019 10:10 AM
Last Updated : 20 Dec 2019 10:10 AM
பொள்ளாச்சி ஏபிடி சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நேற்று நாகப்பாம்பு நுழைந்ததால் குழந்தைகள் அலறியடித்து ஓடினர்.
பொள்ளாச்சி ஏபிடி சாலையில் உள்ள நகரமன்ற நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த வளாகத்தில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தில் 27 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு நேற்று மதியம் ஊழியர்கள் உணவு வழங்கினார்கள். பின்னர் குழந்தைகளை உறங்க வைப்பதற்காக அங்கிருந்த பாயை எடுத்தபோது அதிலிருந்து சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு வெளியே வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகளும் ஊழியர்களும் அலறி அடித்து வெளியே ஓடினர். இது குறித்து வனத்துறையினருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர்.
நீண்ட நேரமாகியும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வராததால் குழந்தைகளும் ஆசிரியர்களும் செய்வதறியாது அங்கன்வாடி மையத்துக்குள் செல்லாமல் வெளியே காத்திருந்தனர். இதையடுத்து, பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கால்நடை உதவியாளர் வினோத் குமார் மரப்பெட்டிக்குள் தஞ்சமடைந்திருந்த நாகப்பாம்பை பிடிக்க முயன்றார்.
அரைமணி நேர போராட்டத்துக்கு பின்னர் பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்தார். இதனால் அங்குள்ள ஆசிரியர்களும் பள்ளிக் குழந்தைகளும் நிம்மதி அடைந்தனர்.
‘அங்கன்வாடி மையத்தை சுற்றி பல மாதங்களாக புதர் மண்டி கிடப்பதாலும், மேற்கூரைகள் பெயர்ந்து காணப்படுவதாலும் அடிக்கடி பாம்புகள் உள்ளே புகுந்து விடுகின்றன.
பலமுறை இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் அங்கன்வாடி மையத்தை சுத்தம் செய்யவில்லை. விஷ ஜந்துக்களால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்னர் பள்ளி வளாகத்தை சுற்றி சுத்தம் செய்ய வேண்டும்’ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT