Published : 19 Dec 2019 04:18 PM
Last Updated : 19 Dec 2019 04:18 PM

போட்டியின்றித் தேர்வான பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்: திடீர் மாரடைப்பால் மரணம்  

மதுரை

போட்டியின்றித் தேர்வான மகிழ்ச்சியில் இருந்த பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். மதுரை திருமங்கலத்தில் இந்த சோகம் நடந்தது.

உள்ளாட்சித் தேர்தல் மாநகராட்சி, நகராட்சி மற்றும் 9 மாவட்டங்கள் தவிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 27 மற்றும் 30-ம் தேதி நடக்கிறது. இதில் வேட்புமனுத் தாக்கல் முடிந்து மனு மீதான பரிசீலனை நடந்து வருகிறது.

இதுபோன்ற உள்ளாட்சித் தேர்தல்களில் சில இடங்களில் வேட்பாளரை எதிர்த்து யாரும் போட்டியிடாவிட்டால் அவர் அன்னபோஸ்டாக (un opposed) போட்டியின்றித் தேர்வானதாக அறிவிக்கப்படுவார்கள். இதுபோன்று நேற்று பல வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

இவ்வாறு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டவர்தான் ஆனந்தன். மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒன்றியம், பொன்னமங்கலம் பஞ்சாயத்தில் உள்ள வீரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (45). இவர், கருமாத்தூரில் பலசரக்குக் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பொதுமக்களிடம் நன்மதிப்பைப் பெற்ற ஆனந்தனை போட்டியிட வைக்க நண்பர்கள் விரும்பினர். அவரும் சம்மதித்து பொன்னமங்கலம் பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

ஆனந்தன் மீது கொண்ட அன்பினால் அவரை எதிர்த்து யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து ஆனந்தன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். பொன்னமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்தில் அவரது வெற்றி குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேட்புமனு பரிசீலனைக்குப் பின் போட்டியில் யாரும் இல்லாததால் ஆனந்தனே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார் எனத் தெரியவந்தது. இதனால் ஆனந்தனை நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்தினர். இதனால் அவர் அதிக மகிழ்ச்சியில் இருந்துள்ளார்.

பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து ஆனந்தன் கருமாத்தூரில் உள்ள தனது கடைக்குச் சென்று வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கியுள்ளார். அப்போது திடீரென அவருக்கு உடல் படபடப்பு, நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்தவர்களிடம் விவரத்தைக் கூறும்போதே மயங்கியுள்ளார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆனந்தன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது மனைவி, குழந்தைகள், உறவினர்கள் கதறி அழுதனர்.

போட்டியின்றித் தேர்வானதால் அதிக மகிழ்ச்சியில் ஆனந்தனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனந்தன் மறைவை அடுத்து 2 வார்டில் தேர்தல் தள்ளிவைக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x