Published : 20 Aug 2015 11:36 AM
Last Updated : 20 Aug 2015 11:36 AM
மோடி - ஜெயலலிதா சந்திப்பு குறித்து தான் கூறியது தனிப்பட்ட முறையில் எவரது மனதையும் புண்படுத்தும், இழிவுபடுத்தும் நோக்கம் உடையது அல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் சந்தித்து பேசியதில், பல்வேறு பிரச்சனைகளில் பாதிப்புக்குள்ளாகியிருக்கிற தமிழகத்திற்கு எந்த நன்மையும் ஏற்படவில்லையே என்கிற ஆதங்கத்தில், நான் ஆற்றிய உரையில் கூறப்பட்ட எனது கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளபட்டிருக்கிறது.
இது குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களும் மற்றும் சில கட்சித் தலைவர்களும் அறிக்கைகள் வெளியிட்டு உள்ளனர். பா.ஜ.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அக்கூட்டத்தில் தெரிவித்திருந்தேன்.
தமிழ்நாட்டின் நலனை மனதில் கொள்ளாமல் சுயநல அரசியல் லாபத்தின் அடிப்படையில் ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தேன். ஆனால், அரசியல் ரீதியான எனது கருத்தைத் திரித்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போராட்டம், எதிர்போராட்டம் என நடைபெறுவது எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது.
எனவே, சென்னையில் நடைபெற்ற மதுவிலக்கு ஆதரவு உண்ணாவிரத போராட்டத்தில் நான் கூறியது தனிப்பட்ட முறையில் எவரது மனதையும் புண்படுத்துவதோ, இழிவுபடுத்துவதோ எனது நோக்கமல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT