Published : 19 Dec 2019 08:26 AM
Last Updated : 19 Dec 2019 08:26 AM
இந்திய ராணுவத்தினர் பயிற்சிக்காக பயன்படுத்தும் 10 கையெறி வெடிகுண்டுகளை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில், கடந்த ஏப்ரல் மாதம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பார்சல் ஒன்று வந்தது. இந்திய ராணுவம் மூலம் இந்த பார்சல் அனுப்பப்பட்டிருந்தது. அது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அக்டோபர் மாதம் வரை வைக்கப்பட்டிருந்தது. அந்த பார்சலுக்கு யாரும் உரிமை கோராததால், ரயில்வே நிர்வாகம் அதை ரயில்வே கிடங்குக்கு அனுப்பி வைத்தது. பின்னர் அந்த பார்சலை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது.
ராணுவத்தில் இருந்து வந்த பார்சல் என்பதால் அதில் என்ன இருக்கிறது என்பதை அறிய, ரயில்வே நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அதை பிரித்துப் பார்த்தனர். அப்போது ராணுவத்தில் பயிற்சி பெறுவோர் பயன்படுத்தும் 10 கையெறி வெடிகுண்டுகள் அதற்குள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அதை ஏலம் விடும் முடிவை கைவிட்டு, 10 கையெறி குண்டுகளையும் பெட்டியுடன் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பாக வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் தெரியவந்தன. இந்திய ராணுத்தின் 72-வது படையணி அந்தமானில் உள்ளது. அங்குள்ள ராணுவ வீரர்களுக்கு வெடிகுண்டுகள் குறித்த பயிற்சி கொடுப்பதற்காக நாக்பூரில் உள்ள ராணுவ அலுவலகத்தில் இருந்து 10 கையெறி வெடிகுண்டுகள் அடங்கிய பெட்டி ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 172-வது ராணுவ படையணியினர் இந்த கையெறி குண்டுகளை பெற்று, அந்தமானுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.
ஆனால், சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் இந்த கையெறி குண்டுகளை இதுவரை வந்து பெற்றுச்செல்லவில்லை. எனவே ரயில்வே பாதுகாப்பு படையினரே அந்த கையெறி குண்டுகளை சென்னை ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். வெடிகுண்டுகள் இருந்த பெட்டியை கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருந்ததற்காக சென்னை ராணுவத்திடம் இருந்து ரூ.7 ஆயிரம் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராணுவ அதிகாரி மறுப்பு
இதுகுறித்து சென்னை ராணுவ அதிகாரிகளிடம் கேட்டபோது, “வெடிகுண்டுகள் போன்றவற்றை இதுபோல ரயிலில் அனுப்பும் பழக்கம் ராணுவத்துக்கு கிடையாது. வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டிருப்பது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் நாக்பூரில் இருந்து வரவில்லை. எனவே, இந்த வெடிகுண்டுகளுக்கும், இந்திய ராணுவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றனர்.
எனவே, சென்ட்ரலுக்கு ரயிலில் வந்த வெடிகுண்டுகள் குறித்து ரயில்வே போலீஸாரும், சென்னை யானைக்கவுனி காவல் நிலைய போலீஸாரும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT