Published : 18 Dec 2019 09:51 AM
Last Updated : 18 Dec 2019 09:51 AM
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவை கண்டித்தும் புதுச்சேரி தெற்கு மாநில திமுக சார்பில் புதுச்சேரி - முதலியார்பேட்டை தபால் நிலை யம் எதிரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்பி பங்கேற்று பேசியதாவது:
2-வது முறையாக பாஜக அரசு பொறுப்பெற்றதில் இருந்து தொடர்ந்து நிறைவேற்றி வருகின்ற சட்டங்கள் அத்தனையும் கருப்பு சட்டங்களாகவே உள்ளன. இந்தியாவின் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது. அரசியலமைப்பு சட்டம் முடங்கிப் போகும் அளவுக்கு குடியுரிமைச் சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது.
நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்க அதிமுக துணையோடு மாநிலங்களவையில் சட்டம் நிறைவேறியுள்ளது. வடக்கு, வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிய அதிமுகதான் காரணம். தொலை தொடர்புகள், இணையதளம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதிமு கதான் இந்த பழியை சுமக்க வேண்டும்.
ஆட்சி அதிகாரம் கிடைக்கா விட்டாலும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். ஆட்சியை காப்பாற்ற பாஜக எதை செய்தாலும் அதிமுக துணை செல்கிறது.
ஜம்மு, காஷ்மீரில் பல தலை வர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. ஜம்மு, காஷ்மீருக்காக முதலில் குரல் கொடுத்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். இந்தியா முழுவதும் கருணாநிதி வழியில் உரிமைக்கு குரல் கொடுக்கும் இயக்கமாக திமுக உள்ளது. முத்தலாக் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம் என பல சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். என்ஐஏ அதிகாரிகளை மத்திய அரசு நியமிக்கும் சட்டம் இயற்றினர். மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இயற்றப்படுகிறது. பாஜக இயற்றிய அனைத்து கருப்பு சட்டங்களுக்கும் எதிர்ப்பு குரல் கொடுத்தது திமுக மட்டும்தான்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்கிறோம். அதை தராமல் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை யூனியனாக மாற்றுகிறார்கள். அடக்குமுறை அரசாங்கத்தை சர்வாதிகாரத்துடன் பாஜக செயல்படுத்தி வருகிறது.
அரசு தரும் உரிமைகளை பெறுவதற்கான அங்கீகாரம்தான் குடியுரிமை. அது இல்லாவிட்டால் நாடற்றவன் ஆகிறான்.
எதற்காக இதை எதிர்க்கிறோம்?
எந்த காரணத்தை முன்னிட்டும் நாட்டு குடிமகனை மதம், ஜாதி,இனத்தின் பெயரால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என தீர்மானிக்கக்கூடாது என்கிறது அரசிய லமைப்பு சட்டம். ஆனால் தற்போதுபாஜக கொண்டு வரும் சட்டம் மதத்தின் ரீதியில் பிரிக்கிறது. எனவேதான் இதனை ஆரம்பத்திலேயே எதிர்க்க போராடுகிறோம்.
ஒரு சில மதத்தை சார்ந்த வர்களுக்கு மட்டும், ஒரு குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது ஏன்? என கேட்டால் பதில் இல்லை. இலங்கையில் இருந்து வந்தவர்கள் மனிதர்கள் இல்லையா? என கேட்டால் பதில் இல்லை.
இந்த சட்டத் திருத்த மசோதாவில் இஸ்லாமியர்களையும், இலங்கை நாட்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என கோருகிறோம். நாங்கள் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 105 வாக்குகள் கிடைத்தது. பாஜனதாவுக்கு 125 வாக்குகள் கிடைத்தது. இதில் 12 வாக்குகள் அதிமுகவைச் சேர்ந்தது.
அவர்கள் நியாயத்தை உணர்ந்து வாக்களித்திருந்தால் இந்த மசோதா நிறைவேறியிருக்காது. பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டத் திருத்த மசோதா நிராகரிக்கப்படும்.
இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்களுக்காக திமுக தொடர்ந்து பாடுபடும்.
நாடு மோசமான நிலையில் உள்ளது. இதனை நாம் மீட்டெடுக்க வேண்டும். இதற்கு திமுக வலுப்பெற வேண்டும். அதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT