Published : 18 Dec 2019 08:28 AM
Last Updated : 18 Dec 2019 08:28 AM
சபரிமலைக்கு தொலைதூரத்தில் இருந்து வரும் வாகனங்களில் 2 ஓட்டுநர்கள் இருக்க வேண்டும் என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் உள்ளது. கடந்த மாதம் மண்டல பூஜைக்காக 16-ம் தேதி நடைதிறக்கப்பட்டு தினமும் வழிபாடு நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
தினமும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பகுதியைக் கடந்து செல்கின்றன. தொலைதூர பயணம், விதிமுறை மீறல்களால் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் வாகனம் விபத்தில் சிக்குவது தொடர்கிறது. கடந்த மாதம் கம்பத்தில் பக்தர்கள் சென்ற கார் மரத்தில் மோதி சிறுமி உயிரிழந்தார்.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் இணைந்து பக்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அதிவேகமாக வாகனங்களை இயக்கவோ, ஒலிபெருக்கிகளை வாகனத்தில் வைக்கவோ கூடாது. காஸ் சிலிண்டர்களை ஏற்றிச் செல்லத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வாகனங்களில் பயணம் செய்யும் பக்தர்கள் பெயர், முகவரி, மொபைல் எண் கொண்ட பட்டியல் வாகன ஓட்டுநரிடம் இருக்க வேண்டும். பக்தர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். லாரி போன்ற சரக்கு வாகனங்களில் பயணிக்கக் கூடாது. வாகனங்களில் முதலுதவிப் பெட்டியில் தேவையான மருந்து மற்றும் இதர உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. தொலைதூரத்தில் இருந்து வரும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் 2 ஓட்டுநர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT