Published : 17 Dec 2019 09:57 AM
Last Updated : 17 Dec 2019 09:57 AM
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் பெறப்பட்ட வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட உள்ளன. இதையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் நிறைவடைந்தது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக தொடர்ந்த வழக்கால், அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் நீதிமன்ற வழக்குகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் இருந்தது.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என கடந்த 2-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த அறிவிப்பை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனுமதி அளித்தது. அதன்படி, சென்னை மற்றும்புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச. 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்ட தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 7-ம் தேதி அறிவித்தது.
அந்த அறிவிப்பின்படி, 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் 1 கோடியே 30 லட்சத்து 43 ஆயிரத்து 528 பெண்கள், 1 கோடியே 28 லட்சத்து 25 ஆயிரத்து 778 ஆண்கள்,1,635 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 941 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த9-ம் தேதி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, 7 நாட்களாக தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நடந்து வந்தது. இறுதிக்கட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில் கடைசி நாளான நேற்று இரு கட்சிகள் மற்றும் அவற்றின் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதனால், மனு தாக்கல் செய்யும் இடங்கள் பரபரப்புடன் காணப்பட்டன. இந்தத் தேர்தலில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், பெறப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்றுநடக்கிறது. மனுக்கள் பரிசீலனையை முறையாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி தேர்தல் அதிகாரிகள் செய்துள்ளதை உறுதி செய்யுமாறு 27 மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இந்த மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், வேட்புமனுக்கள் பரிசீலனை நடுநிலையோடு நடப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த பரிசீலனையின்போது, தகுதியான மனுக்கள் ஏற்கப்பட்டு, ஆட்சேபத்துக்குரிய, முறையாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். வேட்புனுக்களை திரும்பப்பெற வரும் 19-ம்தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அன்றே வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27-ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ம் தேதியும் நடக்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜன. 2-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
புகார் மையம் திறப்பு
இதற்கிடையே மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டு மீறுபவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், உள்ளாட்சி தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை பெறுவதற்கு, சென்னை கோயம்பேட்டில் உள்ளமாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், அனைத்து நாட்களிலும் இயங்கும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை, 18004257072, 18004257073, 18004257074 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு, புகார்களை பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT