Published : 16 Dec 2019 07:42 PM
Last Updated : 16 Dec 2019 07:42 PM
மதுவுக்கு பணம் கேட்டதால் பாரில் நாட்டு வெடிகுண்டை புதுச்சேரியில் ரவுடிகள் வீசினர். சிசிடிவி காட்சிகள் இன்று வெளியான சூழலில் மூவரை போலீஸார் பிடித்துள்ளனர்.
புதுச்சேரி திருபுவனை, திருவண்டார்கோயில் கொத்தபுரிநத்தத்தில் தனியார் மதுபான கடை பார் வசதியுடன் அமைந்துள்ளது. நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் மதுபான கடை பரபரப்பாக இயங்கியது.
நேற்று இரவு 9.30 மணியளவில் 3 பேர் மதுக்கடைக்கு வந்து பல்வேறு பிராண்ட் மது வகைகளை வாங்கி அருந்தினர். இறுதியில் பணம் தராமலேயே கடையைவிட்டு கிளம்ப முயற்சித்தனர். அவர்களிடம் பணம் கோரியபோது, தர மறுக்கவே, கடையின் காசாளரும் கல்லாவைவிட்டு இறங்கிச் சென்று பணம் கேட்டுள்ளார்.
அப்போதும் பணத்தை தர மறுத்து பின்னர் கடையின் முன்பு நின்றுகொண்டு வாக்குவாதம் செய்ததுடன், காசாளரை மிரட்டி தங்களுக்கு மேலும் மதுபாட்டில்களும், பணமும் தர கேட்டு மிரட்டத் தொடங்கினர். இதற்கு காசாளரும், ஊழியர்களும் மறுத்தனர்.
உடன் அந்த மூன்று பேரும் தாங்கள் கொண்டு வந்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை அந்த பாரின் மீது வீசினர். இதனால் அங்குள்ள மதுபாட்டில்கள் உடைந்தன. இதன்காரணமாக அக்கடையில் மது அருந்தி கொண்டிருந்தவர்கள் ஓடினர். இந்த வெடிகுண்டு வீச்சில் ஊழியர்கள் இரண்டுபேருக்கு சிறிய அளவில் காயமும் ஏற்பட்டது.
பின்னர் இதுகுறித்து காசாளர் பாஸ்கர் திருபுவனை போலீஸில் புகார் கொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு ரவுடிகளை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.
நாட்டு வெடிக்குண்டு கலாச்சாரம் புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்துள்ளாதாகவும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் குற்றம்சாட்டும் சூழலும் உருவாகியுள்ளது.
இச்சூழலில் மதுபானக்கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இன்று வெளியானது.
போலீஸார் விசாரணையை தொடர்ந்து வெடிகுண்டு வீசியதாக சன்னியாசிக்குப்பம் பேட் பகுதி விக்னேஷ் (19), கதிர் (19), முகேஷ் (19) ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT