Published : 16 Dec 2019 07:25 PM
Last Updated : 16 Dec 2019 07:25 PM
திருநெல்வேலி டவுன் கல்லணையிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ மாணவிகள் இலவச மடிக்கணினி கேட்டு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
கல்லணை பள்ளியில் பயின்ற மாணவிகள் அளித்த மனு விவரம்:
கல்லணை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-2018-ல் பிளஸ் டூ முடித்துள்ளோம். இந்த கல்வியாண்டில் பயின்ற சிலருக்கு அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதிபேருக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் 2018-2019-ம் ஆண்டில் பயின்றவர்களுக்கு மடிக்கணினி வழங்கியிருக்கிறார்கள். விடுபட்டவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் இந்திய குடியரசு துப்புரவு தொழிலாளர் சம்மேளனத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனு:
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் அலுவலகத்தில் துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்த 1.6.2019 முதல் 1.9.2019 ஆகிய 4 மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து பல அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் துப்புரவு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 மாதங்களுக்கான ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழையபேட்டையிலுள்ள தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி மேலாண்மை குழு தலைவர் கே. ராஜலெட்சுமி உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கே.ஜி. பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அளித்த மனு:
மேட்டுப்பாளையத்தில் 17 பேர் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய நாகை திருவள்ளுவன், வெண்மணி கார்க்கி உள்ளிட்ட 24 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முயற்சி செய்வதை கைவிட வேண்டும். பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும். அவரை விடுவிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மா. மாரியப்பபாண்டியன் உள்ளிட்டோர் அளித்த மனு:
திருநெல்வேலி மாநகராட்சிக்கு சொந்தமான டவுன் போஸ் மார்க்கெட் தினசரி காய்கறி சந்தையை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மறுகட்டமைப்பு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் அங்குள்ள அசல் குத்தகைதாரர்கள் 51 பேருக்கு மாற்று இடமாக டவுன் உழவர் சந்தையை தேர்வு அங்கு தற்காலிகமாக ரூ.25 லட்சத்தில் 51 கடைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஆனால் அங்கு கடைகளை மாற்றாமல் பொருட்காட்சி திடல் பகுதியில் மாற்ற முயற்சி நடைபெறுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். பொருட்காட்சி திடலில் தற்காலிக கடைகளை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆதித்தமிழர் பேரவை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் கு.கி. கலைக்கண்ணன் அளித்த மனுவில், துப்புரவு பணியாளர்கள் மீது தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க தூய்மை பணியாளர் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
திருநெல்வேலி மாநகராட்சி கண்டியப்பேரி வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனு:
கண்டியப்பேரியின் மேற்கு பகுதியிலுள்ள குளத்தின் கரை உடைந்து தெருக்களில் தண்ணீர் வாய்க்கால்போல் பாய்ந்தோடுகிறது. இத்தண்ணீர் ஊர் பொதுகோயில் பகுதியை சேதப்படுத்தியிருக்கிறது. தெருக்களில் தேங்கியுள்ள தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய்கள் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தண்ணீரால் சாலைகளும் சேதமடைந்திருக்கின்றன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குளத்தின் கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வடிகால்கள் அமைத்து தண்ணீர் செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் புலிகள் கட்சியின் கரும்புலிகள் குயிலி பேரவையை சேர்ந்த வி. மாடத்தி உள்ளிட்டோர் அளித்த மனு:
தச்சநல்லூர் உலகம்மன் கோயில் தெரு, 3-வது வார்டில் மதுரை புறவழிச்சாலை அமைந்துள்ளது. இதை கடக்கும்போது அதிகளவில் விபத்துகள் நேரிட்டு வருகின்றன. எனவே இங்கு சுரங்க நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT