Published : 16 Dec 2019 04:57 PM
Last Updated : 16 Dec 2019 04:57 PM
மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் தேர்தல் தொடர்பாக 15 நாளில் அறிவிப்பு வெளியிட உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் இன்று (திங்கள்கிழமை) பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "தமிழகத்தில் உள்ளாட்சிப் பதவிகள் கடந்த 2016 அக்டோபர் 24 முதல் காலியாக உள்ளன. தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளாட்சி அமைப்பகளின் தனி அதிகாரிகளின் பதவிக் காலம் டிச. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிச. 9-ல் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் மாநகராட்சி, நகராட்சிகள் முக்கிய பங்குவகிக்கின்றன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பொது சுகாதாரம், தண்ணீர், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் கிடைக்க வேண்டும்.
இதனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். எனவே தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பை 15 நாளில் அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்". இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT