Published : 16 Dec 2019 12:16 PM
Last Updated : 16 Dec 2019 12:16 PM
கல்பாக்கம் நகரியப் பகுதியின் பாதுகாப்புக்காக, உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த நுழைவு வாயில்கள் மூடப்பட்டன. இதைக் கண்டித்து, உள்ளூர் கிராம மக்கள் மற்றும் மீனவர்கள், புதுப்பட்டினம் மற்றும் சதுரங்கப்பட்டினம் பகுதியில் உள்ள நகரியத்தின் பிரதான நுழைவு வாயில் கதவுகளை மூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அணுமின் நிலைய ஊழியர்கள் பணிக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கண்ட அணுமின் நிலையம் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகள், அதிகாரிகள், பணியாளர்கள் கல்பாக்கம் மற்றும் சதுரங்கப்பட்டினத்தில் உள்ள நகரியப் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகரியப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் நகைத் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் மற்றும் நகரியப் பகுதிக்குள் வந்து செல்லும் வாகனங்கள் மற்றும் நபர்களைக் கண்காணிப்பதற்காக, நகரியப் பகுதியின் பிரதான நுழைவு வாயிலைத் தவிர்த்து பிற நூழைவு வாயில்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. நகரியப் பகுதி மக்கள் தங்களிடம் உள்ள ஆதார் அட்டை உள்பட அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்றுகளை நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சிஐஎஸ்எப் காவலர்களிடம் காண்பித்து, தங்களின் குடியிருப்புகளுக்குச் செல்லலாம்.
மேலும், நகரியப் பகுதியில் வசிப்பவர்களைச் சந்திக்க வரும் உறவினர்கள் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள நுழைவு வாயில் பகுதியில் பார்வையாளர்கான அடையாள அட்டை பெற்று, நகரியப் பகுதியின் உள்ளே சென்று வரலாம் எனவும் பிரதான நுழைவு வாயில்களாகக் கருதப்படும் புதுப்பட்டினம் மற்றும் சதுரங்கப்பட்டினம் பகுதி வாயில்கள் இரவு 11 மணிக்கு மூடப்பட்டு காலை 5 மணிக்குத் திறக்கப்படும் என்றும் அவசர காலங்களில் வாயில் பகுதியில் உள்ள சிஐஎஸ்எப் வீரர்கள் நுழைவு வாயில்களைத் திறந்து மூடுவார்கள் என சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டு, சாலைகளின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டன.
அணுசக்தி துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பொதுப்பணித்துறையின் இந்த நடைமுறைக்கு, மீனவர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சதுரங்கப்பட்டினம் மற்றும் புதுப்பட்டினம் பகுதியில் உள்ள நகரியப் பகுதியின் பிரதான நுழைவு வாயில்களை, உள்ளூர் கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் மூடினர்.
மேலும், கதவுகள் முன்பு அமர்ந்து நிர்வாகத்தைக் கண்டித்து இன்று (டிச.16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிக்குச் செல்ல முடியாமல் நுழைவுப் பகுதியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனினும், சிலர் வெங்கம்பாக்கம் வழியாக பணிக்குச் சென்றனர். மூன்று மணிநேரமாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அணுமின் நிலைய நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT