Published : 16 Dec 2019 11:32 AM
Last Updated : 16 Dec 2019 11:32 AM
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மதுரையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளைவிட கிராமங்களில் நடக்கும் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கடும் போட்டியும், மவுசும் நிலவுகிறது.
தமிழகத்தில் ஊரகப்பகுதி உள்ளாட்சித்தேர்தல் வரும் 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதில், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், கிராம பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலுக்கு கட்சி ரீதியாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். அதனால், இந்த வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிட கட்சியையும், அதன் தலைவர்களையும், சின்னத்தையும் முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பார்கள். அதனால், அவர்கள் பின்னால் அந்தந்த கட்சிக்காரர்கள் மட்டுமே பிரச்சாரத்திற்கு செல்வார்கள்.
வேட்பு மனு தாக்கலுக்கும் அவர்கள் கட்சிக்காரர்கள் மட்டுமே அவர்களுடன் வருகின்றனர். அதனால், இவர்கள் வேட்புமனு தாக்கலில் பெரியளவில் கூட்டம் இல்லை. ஆனால், கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அவர்கள் கட்சியை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பதில்லை. கிராமங்களில் தங்களுக்கு உள்ள சொந்த செல்வாக்கு, குடும்ப பாரம்பரியம், சமூகம், பொருளாதார பலம், அப்பகுதி மக்களுக்கு தன்னார்வமாக செய்த தொண்டுகளையும், நன்கொடைகளையும் முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கின்றனர்.
அதனால், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடிய வேட்பாளர்களுடன் வேட்புமனுதாக்கல் செய்ய பெரும் கூட்டமே வருகின்றனர்.
அதுவும், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டம் அலைமோதுகிறது.
வேட்புமனு தாக்கல் முடிந்த கையோடு கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு போட்டியிடக்கூடியவர்கள் பிரச்சாரத்திற்கும் புறப்பட்டுவிட்டார்கள். இவர்களுடன் குடும்ப உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என்று அதிகமானோர் உடன் செல்கின்றனர்.
கிராமங்களில் பஞ்சாயத்து தலைவரே ஊர் தலைவராக அடுத்த 5 ஆண்டுகள் வலம் வருவார்கள். அவர்களுக்குதான் அந்த பஞ்சாயத்து கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். மக்களுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு கிடைக்கிறது. அதனாலேயே, கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தில், சமூகத்தில் இருந்து பதவிகளைக் பிடிக்க ஒன்றுக்கு மேற்பட்டோர் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் உறவினர்களே கூட சொந்த பகை, சொத்து பகையால் பிரிந்து எதிரெதிர் அணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவார்கள். சில பஞ்சாயத்து தேர்தலில் ஒரு குடும்பமே, சமூகமே குறிப்பிட்ட ஒரு வேட்பாளரை முன்னிறுத்தி ஒட்டுமொத்தமாக அவருக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். அதனால், யாருடைய வெற்றியையும் எளிதில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் கணிக்க முடியாது.
பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் கட்சிகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடும். பழக்க வழக்கம், உறவினர்கள், ஒரே சமூகம் என்ற அடிப்படையிலே வேட்பாளர்களுக்கு ஆதரவு வட்டம் உருவாகும்.
தென் மாவட்டங்களில், சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு இணையாக பஞ்சாயத்து தலைவர் தேர்தல் சூடுபிடித்துள்ளது. வாக்காளர்களை தங்களுக்கு ஆதரவாக வளைக்க தற்போதே வேட்பாளர்களும், அவரது ஆதரவாளர்களுடன் ‘கவனிப்பு’ ஏற்பாடுகளில் இறங்கிவிட்டனர். வேட்பாளர்கள் வாக்காளர் பட்டியலுடன் ஒவ்வொரு கிராமமாக சென்று, அந்தந்த பகுதிகளில் தனிப்பட்ட முறையில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகின்றனர்.
சிலர் மட்டுமே குறிப்பிட்ட கட்சி சாயத்துடன் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் களம் இறங்கி உள்ளனர். ஆனால், அவர்களுக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை.
அதனால், அவர்களுமே தேர்தல் நெருங்க நெருங்க கட்சி சாயத்தை ஒரங்கட்டி வைத்துவிட்டு உறவுமுறைகளையும், சமூகத்தையும் முன்னிறுத்தி ஆதரவு திரட்டத் தொடங்கிவிடுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT