Published : 16 Dec 2019 09:22 AM
Last Updated : 16 Dec 2019 09:22 AM

27 மாவட்டங்களில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்; வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி: ஏற்பாடுகளை கண்காணிக்க மாவட்டவாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னை

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு, வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இன்று அதிக அளவில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதால், உரிய ஏற்பாடுகளை செய்ய மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 9,624 கிராம ஊராட்சிமன்றத் தலைவர் பதவிகள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மொத்தம் 2 கோடியே 58 லட்சத்து 70,941 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. கடந்த 6 நாட்களில் மொத்தம் 1 லட்சத்து 65,659 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

அதிமுக மற்றும் திமுக ஆகிய முக்கிய கட்சிகள் இறுதி நேரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில், கடைசி நாளான இன்று இவ்விரு கட்சிகளும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளன. எனவே, அனைத்து தேர்தல் அலுவலகங்களிலும் உரிய பாதுகாப்பு ஏற்படுகளை செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

வேட்புமனுக்கள் பரிசீலனை 17-ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப்பெற 19-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

இத்தேர்தலை கண்காணிக்க 27 மாவட்டங்களுக்கும் தலா ஒருஐஏஎஸ் அதிகாரியை, தேர்தல்பார்வையாளர்களாக மாநிலதேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக டி.எஸ்.ராஜசேகர், கோவை மாவட்டத்துக்கு ஜி.கோவிந்தராஜ், கடலூர் மாவட்டத்துக்கு சி.முனியநாதன், தருமபுரி மாவட்டத்துக்கு டி.பி.

ராஜேஷ், திண்டுக்கல் மாவட்டத்துக்கு எம்.எஸ்.சண்முகம், ஈரோடு மாவட்டத்துக்கு கே.விவேகானந்தன், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு எஸ்.நாகராஜன், கரூர் மாட்டத்துக்கு என்.வெங்கடேசன், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு டி.ஆப்ரஹாம், மதுரை மாவட்டத்துக்குஎன்.சுப்பையன், நாகப்பட்டினம்மாவட்டத்துக்கு வி.தட்சிணாமூர்த்தி, நாமக்கல் மாவட்டத்துக்கு டி.ஜெகந்நாதன், பெரம்பலூர் மாவட்டத்துக்கு அனில் மேஷ்ராம், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு எஸ்.அமிர்த ஜோதி, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு அதுல் ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர சேலம் மாவட்டத்துக்கு சி.காமராஜ், சிவகங்கை மாவட்டத்துக்கு எம்.கருணாகரன், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு எஸ்.அனீஸ் சேகர், நீலகிரி மாவட்டத்துக்கு பி.ஜோதி நிர்மலாசாமி, தேனி மாவட்டத்துக்கு எம்.ஆசியா மரியம், தூத்துக்குடி மாவட்டத்துக்கு வி.சம்பத், திருச்சி மாவட்டத்துக்கு எம்.லட்சுமி, திருப்பூர் மாவட்டத்துக்கு ஆர்.கஜலட்சுமி, திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஏ.ஞானசேகரன், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இ.சுந்தரவல்லி, திருவாரூர் மாவட்டத்துக்கு கவிதா ராமு, விருதுநகர் மாவட்டத்துக்கு வி.அமுதவல்லி ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அறிவுறுத்தல்

தேர்தலை வெளிப்படையாக நடத்த ஏதுவாக பல்வேறு அறிவுறுத்தல்களை தேர்தல் பார்வையாளர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி வழங்கிஉள்ளார். அதன் விவரம் வருமாறு:அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் எளிதில் வந்து வாக்களிக்கும் வகையில் தேவையான அனைத்துஅடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் கூட்டத்தை நடத்தி, தேர்தல் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

வேட்புமனுக்கள் பரிசீலனை நடுநிலையோடு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து, பொதுமக்கள் அச்சமின்றிவாக்களிக்க தகுந்த சூழலை ஏற்படுத்த வேண்டும். வாக்குச் சாவடி மையங்களில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல், வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதை தேர்தல் பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x