Published : 16 Dec 2019 09:13 AM
Last Updated : 16 Dec 2019 09:13 AM
சென்னை மியூசிக் அகாடமியின் 93-வது இசை மாநாடு மற்றும் இசை விழா மியூசிக் அகாடமி விழா அரங்கில் நேற்று தொடங்கியது. “கர்னாடக இசை எனும் கலாச்சாரப் பெருமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது நம் கடமை” என்று சிங்கப்பூர் அரசின் தகவல் தொடர்பு மற்றும் வணிகப் பரிவர்த்தனை துறையின் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மியூசிக் அகாடமியின் 93-வது ஆண்டு இசை மாநாடு மற்றும் இசை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிங்கப்பூர் அரசின் தகவல் தொடர்பு மற்றும் வணிகப் பரிவர்த்தனை துறையின் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தார். தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:மியூசிக் அகாடமியின் 93-வது இசை விழாவை தொடங்கிவைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சங்கீத கலாநிதி விருதுக்குத் தேர்வாகியிருக்கும் எஸ்.சௌம்யா அறிவியலில் பட்டம் பெற்றவராக இருந்தாலும் இசையைத் தன்னுடைய துறையாகத் தேர்ந்தெடுத்து அதை பெருமைப்படுத்தியிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
90 ஆண்டுகளுக்கும் மேலாக மியூசிக் அகாடமி கலைச் சேவை செய்துவருவது மிகவும் பெருமையான விஷயம். சிங்கப்பூர் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, மியூசிக் அகாடமியோடு இணைந்து ஆண்டுதோறும் சிங்கப்பூர் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை நடத்துவதை பெருமையாக உணர்கிறேன். விரைவிலேயே சிஃபா - மியூசிக் அகாடமி என இரண்டு அமைப்புகளும் இணைந்து டிஜிட்டல் முறையில் கலைகளை இரண்டு நாட்டு மாணவர்களுக்கும் கிடைப்பதற்கான யோசனைகளையும் முயற்சிகளையும் எடுத்துவருகிறோம்.
சிங்கப்பூரில் இந்தியர்கள் அல்லாத பலரும் கர்னாடக இசையை ஆர்வமாகப் படிக்கின்றனர். கர்னாடக இசை என்னும் கலாச்சார பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமை என்றார்.
முன்னதாக மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி தனது வரவேற்புரையில் பேசியதாவது:மிகவும் இளம் வயதில் மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 2-வது கலைஞர் என்னும் பெருமையை எஸ்.சௌம்யா பெறுகிறார். மிகக் குறைந்த வயதில் சங்கீத கலாநிதி விருதைப் பெற்ற முதல் கலைஞர் எம்.எல்.வசந்தகுமாரி. விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சௌம்யா உள்ளிட்ட கலைஞர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். எஸ்.ஈஸ்வரனின் டிஜிட்டல் முறையில் கலையை வளர்க்கும் யோசனைக்கும் அவர் சார்ந்திருக்கும் துறையில் அவர் செய்துவரும் செயல்களையும் பாராட்டுகிறேன். இந்த ஆண்டு மியூசிக் அகாடமியில் 80 நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. காலையில் இசை, நடனம் தொடர்பான கருத்தரங்கங்களும் நடக்கவிருக்கின்றன என்றார்.
ஏற்புரை வழங்கிய எஸ்.சௌம்யா பேசும்போது, “இந்த மேடையில் இந்த தருணத்தில் நிற்பதற்குக் காரணம் அம்பாள் காமாட்சியின் அருளும், என்னுடைய பெற்றோர் ஆசிகளும் ‘சங்கீத கலாநிதி’ எஸ்.ராமநாதன், டி.பிருந்தா அவர்களின் குருவருளும்தான். என்னை சங்கீத கலாநிதி விருதுக்காக தேர்வு செய்ததற்கு நன்றி. அதோடு இசையில் தனக்கென முத்திரை பதித்த எம்.எஸ்.அம்மாவின் பெயரில் அமைந்த `தி இந்து’வின் அறக்கொடை விருதுக்கும் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி.
இசையில் அரிய விஷயங்களை தேடிப் போய் தெரிந்து கொள்ளுங்கள். இதுதான் இளம் கலைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது” என்றார்.
விழாவில் பங்கேற்ற ‘சங்கீத கலாநிதி’ உமையாள்புரம் சிவராமன் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சௌம்யாவின் பெயரை முன்மொழிந்தார். அதை ‘சங்கீத கலாநிதி’ சுதா ரகுநாதன் வழிமொழிந்தார். இதைத் தொடர்ந்து, மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட எஸ்.சௌம்யாவுக்கு ‘தி இந்து’ வழங்கும் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி’ அறக்கொடை விருதை சிறப்பு விருந்தினர் எஸ்.ஈஸ்வரன் வழங்கினார். மியூசிக் அகாடமியின் ஆண்டு மலரை எஸ்.ஈஸ்வரன் வெளியிட முதல் பிரதியை ‘சங்கீத கலாநிதி’ உமையாள்புரம் சிவராமன், ‘சங்கீத கலாநிதி’ சுதா ரகுநாதன், ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சௌம்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மியூசிக் அகாடமியின் செயலாளர் வி.காந்த் நன்றியுரை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT