Published : 14 Dec 2019 03:28 PM
Last Updated : 14 Dec 2019 03:28 PM

சட்டவிரோத லாட்டரியைத் தடை செய்ய அதிமுக அரசுக்கு என்னதான் தடை? - வேல்முருகன் கேள்வி

வேல்முருகன்: கோப்புப்படம்

சென்னை

சட்டவிரோத லாட்டரியைத் தடை செய்ய அதிமுக அரசுக்கு என்னதான் தடை? என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரத்தில் லாட்டரி டிக்கெட்டால், கடன் நெருக்கடி ஏற்பட்டு, தன் மூன்று பிள்ளைகளையும் கொன்று விட்டு, பின்னர் தன் மனைவியுடன் நகை தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (டிச.14) வெளியிட்ட அறிக்கையில், "ஏராளமான தொழிலாளர்கள் லாட்டரிச் சீட்டுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தத்தொழிலைச் செய்வோரே கூறுகிறார்கள்.

சட்டவிரோத மூன்று எண் மற்றும் ஒற்றை எண் லாட்டரிகளை நடத்துகிறவர்கள் ஒரு மாஃபியா கும்பலாகவே செயல்படுகிறார்கள். அவர்கள் காவல்துறையினர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளையும் கவனித்துவிடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஒரு துண்டுச் சீட்டில் மக்கள் சொல்லும் மூன்று எண்களை எழுதி சீல் வைத்துக் கொடுத்து விட்டு அவர்களின் வாட்ஸ் அப் எண்களை வாங்கிக் கொள்கின்றனர். மூன்று எண்கள் கொண்ட ஒரு செட்டின் விலை ரூ.60 - ரூ100 அல்லது ரூ,100 - ரூ.500 வரை இருக்கும். பம்பர் பரிசுத் தொகைக்கு ஏற்ப செட்டின் விலை கூடுதலாக இருக்கும். ஒருவர் எத்தனை செட் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். சீட்டில் தந்த மூன்று எண்களுக்கு பரிசு விழுந்தால் குறைந்தபட்சமான ஒரு தொகைதான்; கடைசி இரண்டு எண்களுக்கு பரிசு விழுந்தால் கொஞ்சம் கூடுதலான தொகை. கடைசி எண்ணுக்கு பரிசு விழுந்தால் அது பெருந்தொகை! பரிசுக்கான குலுக்கல் ஆன்லைன் மூலம் கேரளாவில் நடப்பதாக ஏஜெண்டுகள் சொல்வார்கள்;

ஆனால் தமிழகத்தில்தான் நடக்கிறது. வாங்கிச் சென்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு முடிவுகளை அனுப்புவார்கள். பரிசு விழுந்தால் சீட்டைக் கொடுத்து தொகையை வாங்கிக் கொள்ளலாம்.

பிரதமர் நரேந்திர மோடி என்றைக்கு இரவில் பண மதிப்பழிப்பை அறிவித்தாரோ அன்றிலிருந்துதான் என்பது தெரியவரும். பண மதிப்பழிப்பைத் தொடர்ந்து ஜிஎஸ்டி வரி விதிப்பு. இத்தாக்குதல்களின் விளைவாக சிறு, குறு தொழில்கள் முற்றாக அழிந்துவிட்டன. கிராமப்புற பொருளாதாரம் இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் நகைப் பட்டறை உள்ளிட்ட சிறு பட்டறைத் தொழில்களும் முடங்கி விட்டன.

இவையெல்லாம் மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் என்றால் இப்போதோ ஆலைகளில் ஆட்குறைப்பு, கதவடைப்பு, ஆலை மூடல், வேலைப் பறிப்பு, வேலை இழப்பு, விலையேற்றம், வேலையின்மை இவற்றோடு அதல பாதாள பொருளாதார வீழ்ச்சி!

கடந்த ஆண்டு விவசாயம் பொய்த்துப் போய் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வண்ணாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி முத்துசாமி தன் மகன், மகள், தாயுடன் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு முந்தைய பல ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 விவசாயிகளூக்கு மேல் தற்கொலை செய்துகொண்டனர் என்பது தமிழகமே நன்கறிந்த செய்தி. நீட் தேர்வு திணிப்பால் அரியலூர் அனிதா தொடங்கி 5 பேர் தற்கொலை செய்துகொண்டது அதன் பின் நடந்த கொடூர செய்தி.

இப்படி தற்கொலைகளுக்குக் காரணம், சிறு குறு தொழில்கள் அழிந்து, வேலையின்மையும் விலையேற்றமும் பெருகி, நாட்டின் பொருளாதாரமே அதல பாதாளத்துக்குச் சென்றது மாத்திரமே அல்ல; அந்த இடத்தை லாட்டரி போன்ற சட்டவிரோத தொழில்கள் பிடித்துக் கொண்டதே காரணமாகும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் லாட்டரியைத் தடை செய்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலோ சட்டவிரோத லாட்டரி மட்டுமல்ல; குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்களும் கொட்டமடிக்கின்றன. அதனால் குடும்பத்தோடு தற்கொலையும் தொடர்கதைதான் என்பதில் சந்தேகமில்லை.

எனவேதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி எழுப்புகிறது: சட்டவிரோத லாட்டரியைத் தடை செய்ய அதிமுக அரசுக்கு என்னதான் தடை?" என வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x