Published : 14 Dec 2019 02:54 PM
Last Updated : 14 Dec 2019 02:54 PM
திருமண உறவுகளுக்குள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஏன் குற்றமாக கருதப்படவில்லை என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் இன்று (டிச.14) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியா முழுவதும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஐதராபாத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். உன்னாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்கள், ஆதாரம் இல்லை எனக்கூறி விடுவிக்கப்பட்டிருக்கும் மோசமான நிலை உள்ளது.
ஆனால், நிர்பயா நிதியை எப்படி செலவழிப்பது என தங்களுக்கு தெரியவில்லை என்று சொல்லக்கூடிய அரசு தமிழகத்தில் உள்ளது. தெருக்களில் மின்விளக்குகள் இல்லை, சிசிடிவி கேமராக்கள் இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் அளவுக்கு போதுமான நீதிமன்றங்கள் இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனிப்பிரிவை ஏற்படுத்துவதற்காக கூட நிர்பயா நிதியை தமிழக அரசு பயன்படுத்தியிருக்கலாம். இந்த நிதியை பயன்படுத்தி தொழில்நுட்பங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால், என்ன செய்வதென தெரியவில்லை என சொல்வது மிகக் கேவலமான நிலை" என தெரிவித்தார்.
அப்போது, திருமண உறவுக்குள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த கேள்விக்கு, "திருமணத்திற்குள் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதில்லை என நாம் சொல்ல முடியாது,. கணவன் - மனைவிக்குள்ளே பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. ஆனால், இவை இந்தியாவில் இன்றுவரை குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், பல நாடுகளில் திருமணத்திற்குள் நடக்கும் பாலியல் வன்முறைகள் குற்றமாக கருதப்படுகிறது, தண்டிக்கப்படுகின்றனர். இந்தியா ஏன் இதனை குற்றமாக கருதவில்லை என புரியவில்லை. நானும் இதுகுறித்து தனிநபர் மசோதா கொண்டு வந்திருக்கிறேன். விரைவில் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறேன்" என கனிமொழி தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமைகளில் சினிமாவுக்குள்ள பங்கு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "எல்லோருக்கும் ஒரு பொறுப்புணர்வு வேண்டும். எல்லா குற்றங்களுக்கும் பெண்களை குற்றவாளியாக்கும் சூழ்நிலை உள்ளது. பெண்களை பின்தொடர்ந்து தொந்தரவு செய்வது தவறில்லை என்ற விஷயங்கள் தொடர்ச்சியாக சினிமாவில் காட்டப்படுகின்றன. எல்லோருக்கும் பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். வன்முறையை பெண்கள் மீது ஏவுவது தவறு என்பதை எல்லா ஊடகங்களும் புரிந்துகொள்ள வேண்டும். சமூகம், கல்வி நிறுவனங்கள் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆண்-பெண் சமம் என்பதை பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும்.
ருவாண்டா போன்ற நாடுகளில் பெண்களே சட்டம் இயற்றும் அதிகாரத்துக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருக்கின்றன. 33% இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டவுடனேயே பெண்கள் மீதான குற்றம் குறைந்துவிடும் என நான் சொல்லவில்லை. படிப்படியாக இந்த மாற்றம் உருவாக வேண்டும்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT