Published : 14 Dec 2019 11:51 AM
Last Updated : 14 Dec 2019 11:51 AM

ஆந்திராவைப் போன்று பாலியல் குற்றங்களைத் தடுக்க சிறப்புச் சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக ஆந்திரத்தில் நிறைவேற்றப்பட்டது போன்ற அம்சங்களைக் கொண்ட சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று (டிச.14) வெளியிட்ட அறிக்கையில், "ஆந்திராவில் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 21 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கவும், பாலியல் குற்றங்களைச் செய்தவர்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கவும் வகை செய்யும் சட்ட முன்வரைவு ஆந்திர மாநில சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான புரட்சிகரமான நடவடிக்கை இது என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் 4 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டத்திற்கு மறைந்த பெண்ணின் நினைவாக ஆந்திரப் பிரதேச திஷா சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் விசாரணையை விரைந்து முடித்து 7 வேலை நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து 14 வேலை நாட்களில் நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்க வசதியாக இந்திய தண்டனைச் சட்டத்தில் 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களுக்கான தண்டனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில் திஷாவை பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்களை அந்நகர காவல்துறை சுட்டுக் கொன்ற போது, அதற்கு காரணமான காவலர்களை தெலங்கானா மக்கள் கொண்டாடினார்கள்; அவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்தன. எவ்வளவு கொடூரமான குற்றங்களை செய்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நீதிமன்றத்தின் படிகளில் ஏற்றப்பட்டு, சட்டப்படி தான் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினாலும், குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க பல ஆண்டுகள் ஆகலாம்; அவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்படுவது தான் சரி என்று உணர்வு கூறியதன் வெளிப்பாடு தான் அத்தகைய கொண்டாட்டங்கள் ஆகும்.

சட்டப்படி நீதி கிடைக்க நீண்ட நாட்களாகும் என்ற சலிப்பு மக்களிடையே ஏற்பட்டிருப்பது தான் இதற்கெல்லாம் காரணம் ஆகும். அதைப் போக்கும் வகையில் தான் ஆந்திரா இச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது தேவையான நேரத்தில், தேவையான நடவடிக்கையாகும்.

தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும், வன்கொடுமைகளுக்கும் நியாயமான காலத்தில் நீதி கிடைப்பதில்லை என்ற கொந்தளிப்பு மக்களிடம் நிலவுகிறது. பாலியல் வன்கொடுமைகளை திட்டமிட்டு நிகழ்த்துவோர் தண்டிக்கப்படாததால், மீண்டும், மீண்டும் இத்தகைய குற்றங்களைச் செய்கின்றனர்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு கூட கடலூரில் திரைப்படத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கருவுற்ற பெண்ணை, அவரது கணவனை தாக்கிவிட்டு கடத்திச் சென்ற 4 மனித மிருகங்கள், கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற குற்றங்களைச் செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்படாவிட்டால், அடுத்த சில வாரங்களில் பிணையில் வந்து இதேபோல் மேலும் பல பெண்களைச் சீரழிப்பார்கள்.

எனவே, பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நியாயமான அவகாசத்தில் விசாரித்து முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பாமகவைப் பொறுத்தவரை மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் நிலைப்பாடு ஆகும். அதற்காக மரணதண்டனை ஒழிப்பு மாநாட்டை பாமக நடத்தியுள்ளது. ஆனாலும், டெல்லியில் நிர்பயா, தூத்துக்குடியில் 7 ஆம் வகுப்பு மாணவி ஆகியோர் 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சூழலில் நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. பாமகவின் இந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கிறது

பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக 2013 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட 13 அம்சத் திட்டத்தில் முதன்மையான அம்சம், பாலியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க மகளிர் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்பது தான். ஆனால், அதன்பின் 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஒரு சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் இன்று வரை சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. மேலும் பல மாவட்டங்களில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க இப்போது தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வேகம் போதுமானதல்ல.

எனவே, தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக ஆந்திரத்தில் நிறைவேற்றப்பட்டது போன்ற அம்சங்களைக் கொண்ட சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் கடலூரில் கருவுற்ற பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 4 மனித மிருகங்களுக்கு கடுமையான தண்டனையை விரைவாக பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x