Published : 14 Dec 2019 09:35 AM
Last Updated : 14 Dec 2019 09:35 AM
கிருஷ்ணகிரி அணை பாசனத்தில் 2-ம் போக சாகுபடி இல்லாததால் கோடையில் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுப் பாசனம் மூலம் நேரடியாக 26 ஆயிரத்து 924 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கால்வாய் இணைப்புகள் மூலம் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆற்றை ஒட்டியுள்ள கிருஷ்ணகிரி அணை, திம்மாபுரம், மலையாண்டஅள்ளி, பையூர், கால்வேஅள்ளி, அவதானப்பட்டி, பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், சின்னமுத்தூர், காவேரிப்பட்டணம், தேர்பட்டி, சவுளூர், பென்னேஸ்வரமடம், நெடுங்கல், கொட்டாவூர் ஆகிய பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது முதல் போக சாகுபடியில் நெல் அறுவடை முடிந்து அதில் இருந்து கிடைக்கும் வைக்கோலை சாலையோரம் குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர். கால்நடைகளுக்கு முக்கிய உணவான வைக்கோலை, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையோரம் வசிக்கும் விவசாயிகள் நேரில் வந்து, வைக்கோலின் தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்து வாங்கிச் செல்கின்றனர்.
தற்போது பெய்த மழையாலும், வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளதாலும் வைக்கோலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால், கடந்த ஆண்டை விட வைக்கோல் விலை சற்று அதிகமாக உள்ளது என கால்நடை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராம கவுண்டர் கூறும்போது, ‘‘கிருஷ்ணகிரி அணை பாசனத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ஏக்கரில் 2 போகம் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதில் கால்நடைகளுக்கு முக்கிய உணவான வைக்கோல் விற்பனை மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும்.
தற்போது, முதல் போகத்தில் அறுவடையின் போது பெய்த மழையால் வைக்கோல் விலை குறைந்துள்ளது. இயந்திரம் மூலம் பிரித்தெடுக்கப்பட்ட வைக்கோல் உலராமல், அதன் வாசம் குறைந்துள்ளதால் ஒரு டிராக்டர் லோடு வைக்கோல் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
வைக்கோலில் வாசம் இருந்தால் மட்டுமே மாடுகள் விரும்பி உண்ணும். மேலும், கையால் நெல் தூற்றி கிடைக்கும் வைக்கோலில் வாசம் அதிகம் இருக்கும் என்பதால், அவ்வாறான வைக்கோல் டிராக்டர் லோடு ரூ.12 ஆயிரம் வரை விற்பனையாகிறது. கோடையில் 2-ம் போக சாகுபடியில் கிடைக்கும் வைக்கோல் வாசம் மிகுந்ததாக இருக்கும் என்பதால் விலை கூடுதலாக கிடைக்கும்.
கிருஷ்ணகிரி அணையில் பழுதான மதகுகளை மாற்றிமைக்கும் பணிகள் ஜனவரி மாதம் தொடங்க உள்ளதால், 2-ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காது.
இதனால் 2-ம் போக நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு, கோடையில் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படும். இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் கோடையில் கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராம கவுண்டர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT