Published : 13 Dec 2019 01:11 PM
Last Updated : 13 Dec 2019 01:11 PM

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன் என்ன பேசினீர்கள்? - வைகோ கேள்விகளுக்கு மத்திய இணையமைச்சர் விளக்கம்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன் என்ன பேசினீர்கள் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய-இலங்கை உறவுகளை மேம்படுத்துவதற்காக, இலங்கை அதிபருடன் அரசு பேசியதா? இலங்கை அதிபர் இந்தியா வருகின்றாரா? அவ்வாறு இருப்பின், இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்ற ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குவது குறித்து அவருடன் இந்திய அரசு பேசுமா? இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள, தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படுவது குறித்தும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தும் அரசு பேசுமா? என மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் எழுத்துபூர்வமாக கேள்விகள் எழுப்பியிருந்தார்.

வைகோவின் கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுத்துபூர்வமாக அளித்துள்ள விளக்கம்:

"பிரதமரின் சிறப்புத் தூதராக, வெளியுறவுத் துறை அமைச்சர், நவம்பர் 19 ஆம் தேதி இலங்கைக்குச் சென்றார். இந்தியாவுக்கு வருகை தருமாறு, இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்தார்.

நவம்பர் 28-30 ஆகிய தேதிகளில், இலங்கை அதிபர் இந்தியா வருகை தந்தார். இந்திய குடியரசுத் தலைவரையும், பிரதமரையும் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து, அனைத்துக் கோணங்களிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

மக்கள் ஆட்சிக் கோட்பாட்டில் பற்று கொண்டுள்ள, பன்முகத்தன்மை வாய்ந்த, மனித உரிமைகளை மதிக்கின்ற, ஒன்றுபட்ட இலங்கைக்குள், அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு, அனைத்துத் தரப்பினருக்கும் இணக்கமான ஒரு தீர்வு காண வேண்டும் என்றும் அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும், இந்திய அரசு வலியுறுத்தியது.

அதற்கு, இலங்கை அதிபர், எனக்கு வாக்கு அளித்தவர்களுக்கு மட்டும் அல்ல, எனக்கு வாக்கு அளிக்காதவர்கள், இனம், மத அடிப்படையிலான அனைத்துத் தரப்பினருக்கும் நான் அதிபர். இலங்கையின் அனைத்துக் குடிமக்களுக்கும் கடமை ஆற்ற நான் உறுதி பூண்டுள்ளேன் என்று குறிப்பிட்டார்" என வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x