Published : 13 Dec 2019 12:25 PM
Last Updated : 13 Dec 2019 12:25 PM
ஏழைகளைப் பலி வாங்கும் சட்டவிரோத லாட்டரி விற்பனையைத் தடுக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி இன்று (டிச.13) வெளியிட்ட அறிக்கையில், "விழுப்புரம் சிற்றேரிக்கரையைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி ஒருவர் 3 இலக்க லாட்டரிகளை வாங்கி, கடனாளி ஆனதால், 3 குழந்தைகளைக் கொன்று விட்டு, மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார் என்று வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விழுப்புரம் சிற்றேரிக்கரைப் பகுதியில் உள்ள சலாமத் நகரைச் சேர்ந்த பொற்கொல்லரான அருண் என்பவர் 3 இலக்க லாட்டரிகளை வாங்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. தினமும் ரூ.5,000 வரைக்கும் லாட்டரிகளை வாங்கி வந்த அவர், எதிர்பார்த்த அளவுக்கு பரிசு கிடைக்காததால் பல லட்சங்களுக்குக் கடனாளி ஆனார்.
தொழிலும் இழப்பு ஏற்பட்ட நிலையில், தமக்கு சொந்தமான வீட்டை ரூ.50 லட்சத்துக்கு விற்பனை செய்து கடன்களை அடைத்துள்ளார். அதன் பின்னர் நகை செய்யும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த அவர், தொடர்ந்து லாட்டரிகளை வாங்கி கடனாளி ஆனார். அந்தக் கடன்களை அடைக்க வழி இல்லாததால் 3 மாத கைக்குழந்தை, 3 வயதுக் குழந்தை, 5 வயதுக் குழந்தை என மூன்று பெண் குழந்தைகளுக்கு சயனைடு விஷத்தைக் கொடுத்துக் கொலை செய்து விட்டு, மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குழந்தைகளை விஷம் கொடுத்து கொல்லும் காணொலிக் காட்சிகளையும் அவர் வாட்ஸ் அப் மூலம் வெளியிட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட லாட்டரிகளுக்கு அடிமையான அவர், எந்த அளவுக்கு இழப்புகளைச் சந்தித்து, விரக்திக்கு ஆளாகியிருந்தால், 3 மாத கைக்குழந்தையைக் கூட கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்தால், தடை செய்யப்பட்ட லாட்டரிகள் சமூகத்தில் எந்த அளவுக்கு சீரழிவை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தடை செய்யப்பட்ட இத்தகைய லாட்டரிகளின் சட்டவிரோத விற்பனை தடுக்கப்படாதது தான் இதற்கு காரணமாகும்.
நகை செய்யும் தொழிலாளி அருண் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருப்பது 3 இலக்க லாட்டரியால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு ஒரு சிறு உதாரணம் மட்டும் தான். தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த லாட்டரிகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் அனைத்து மாவட்ட, வட்ட தலைநகரங்களிலும் இத்தகைய லாட்டரிகள் தடையின்றி விற்கப்படுகின்றன. இந்த வகை லாட்டரிகள் அச்சிடப்படாமல் துண்டுச் சீட்டுகளில் எழுதி விற்பனை செய்யப்படுகின்றன.
மாநில அரசுகளின் மூலம் அதிகாரபூர்வமாக விற்பனை செய்யப்படும் லாட்டரிகள் தமிழ்நாட்டில் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதை மீறுவோர் எந்த சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதே பிரிவுகளைப் பயன்படுத்தி 3 இலக்க லாட்டரிகளை விற்போர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால், 3 இலக்க லாட்டரிகளை விற்பனை செய்வோரைத் தண்டிக்க சரியான சட்டப்பிரிவுகள் இல்லை என்று கூறி, இத்தகைய அத்துமீறலை காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த அலட்சியம் தான் சட்டவிரோத லாட்டரிகளை ஊக்குவிக்கிறது.
லாட்டரிகள் அன்றாட கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்தே புழக்கத்தில் விடப்படுகின்றன. இவை யாரோ ஒரு பணக்காரரை கோடீஸ்வரராக்கி, கோடிக்கணக்கான ஏழைகளை நடுத்தெருவுக்கு இழுத்து வருகின்றன. அதனால் தான் தமிழ்நாட்டில் லாட்டரிகளைத் தடை செய்ய வேண்டும் என்று பாமக கடுமையாக போராடி வந்தது. அதன் பயனாகத் தான் 2003 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டது.
ஆனால், அன்று முதல் இன்று வரை கள்ளச் சந்தையில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சென்னை போன்ற நகரங்களில் ஓர் இலக்க லாட்டரிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அருணைப் போலவே தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ஏழைகள் லாட்டரியில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுகுறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டால் அது பெரும் அதிர்ச்சியை அளிக்கும்.
2003 ஆம் ஆண்டில் லட்டரிகள் தடை செய்யப்பட்ட போது, அதை நம்பியிருந்த லட்சக்கணக்கான விற்பனையாளர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்கள் செய்து தரப்படாததால், அவர்களில் பலர் வேறு வழியின்றி சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதன் மூலமாக மட்டும் தான் பரிசுச்சீட்டு விற்பனையை முற்றிலுமாக தடுக்க முடியும்.
எனவே, தடை செய்யப்பட்ட லாட்டரிகளுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலம் ஏழைகளை பலிவாங்கும் லாட்டரி விற்பனையை அரசு தடுக்க வேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT