Published : 13 Dec 2019 11:09 AM
Last Updated : 13 Dec 2019 11:09 AM
க.சக்திவேல்
போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் பெற நிர்ணயிக்கப்பட்ட 8-ம் வகுப்பு கல்வித்தகுதி நீக்கப்பட்டுள்ளதால், புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கார், ஆட்டோ போன்ற இலகுரக பொதுப்போக்குவரத்து (சரக்கு, பயணிகள்) வாகனங்களை இயக்குவதற்கு உரிமம் பெற (பேட்ஜ்), 20 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களை இயக்குவதற்கு உரிமம் பெற, இலகுரக போக்குவரத்து வாகன உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இந்த உரிமங்களை பெற குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 8-ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்கள், படிக்காதவர்கள் வாகனம் ஓட்டும் திறன் பயிற்சி பெற்றிருந்தும் உரிமம் பெற முடியாத நிலை ஏற்பட்டதால், வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, கல்வித் தகுதியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதை ஏற்று, சுமார் 20 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறும் விதமாக, போக்குவரத்து வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை நீக்குவதாக மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. இந்த உத்தரவு, கடந்த அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், கடந்த ஒரு மாதத்தில் பேட்ஜ் கேட்டு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, தாராபுரம் மற்றும் உதகையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பேட்ஜ் கோரி கடந்த ஜனவரியில் 201, பிப்ரவரி 347, மார்ச் 343, ஏப்ரல் 266, மே 254, ஜூன் 228, ஜூலை 423, ஆகஸ்ட் 282, செப்டம்பர் 289, அக்டோபரில் 227 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த எண்ணிக்கையானது நவம்பரில் 1,443 ஆக அதிகரித்துள்ளது. அடிப்படை கல்வித் தகுதி நீக்கப்பட்டாலும், போக்குவரத்து விதிகள், சாலையில் உள்ள போக்குவரத்துக் குறியீடுகள், எச்சரிக்கை அறிவிப்புகள், ஆபத்துக் காலங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தெளிவான பயிற்சியை ஓட்டுநர்கள் பெற்றிருக்க வேண்டுமென மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
எனவே, கல்வித் தகுதி இல்லாவிட்டாலும் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த தகுதி இருந்தால் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT