Published : 13 Dec 2019 09:56 AM
Last Updated : 13 Dec 2019 09:56 AM

164 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது; எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே நீராவி இன்ஜின் ரயில் நாளை இயக்கம்: பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி

சென்னை

சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே, 164 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீராவி இன்ஜின் சிறப்பு ரயில் நாளை (14-ம் தேதி) இயக்கப்படுகிறது. இதில், பொதுமக்கள் கட்டணம் செலுத்தி பயணம் செய்யலாம்.

இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்தது ‘இஐஆர் 21’ என்ற நீராவி ரயில் இன்ஜின். கடந்த 1855-ம் ஆண்டு தயாரான இந்த இன்ஜின், 132 குதிரைத் திறன் கொண்டது, இந்திய ரயில்வேக்கு 55 ஆண்டுகள் சேவை செய்த பின்னர், கடந்த 1909-ம் ஆண்டு ஓய்வுபெற்று, ஜமால்பூர் ரயில்வே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அங்கு, 101 ஆண்டுகள் ஓய்வெடுத்த இந்த ரயில் இன்ஜின், பின்னர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, புதுப்பொலிவூட்டப்பட்டது. இந்த இன்ஜினுடன் ஒரு பெட்டி மட்டும் இணைக்கப்பட்டு, மக்களின் பார்வைக்காக ஆண்டுதோறும் ஒன்றிரண்டு முறை இயக்கப்பட்டு வருகிறது. பழைய ‘ஹாரன்’ சத்தத்துடன் புகையை வெளியேற்றியபடி மெதுவாக செல்லும் இந்த ரயிலைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். இந்த ரயிலில் ஓரிரு முறை மட்டுமே பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நீராவி இன்ஜின் சிறப்பு ரயில், 40 பேர் பயணம் செய்யக்கூடிய ரயில் பெட்டியுடன் இணைக்கப்பட்டு, சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே நாளை (14-ம் தேதி) 2 முறை இயக்கப்படுகிறது. அதன்படி, எழும்பூரில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு பகல் 12.15 மணிக்கு கோடம்பாக்கம் சென்றடையும். அடுத்ததாக எழும்பூரில் இருந்து பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு 2 மணிக்கு கோடம்பாக்கம் செல்லும். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இந்த ரயில் நிறுத்தப்பட்டு, அதில் வரும் பயணிகளுக்கு கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்படும்.

இந்த பாரம்பரிய இன்ஜின் ரயிலில் ஒருமுறை பயணம் செய்ய சிறுவர்களுக்கு ரூ.300, பெரியவர்களுக்கு ரூ.500 எனவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.1,000 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, உணவு, பாரம்பரிய ரயில் நினைவுப் பரிசு என தனித்தனி கட்டணம் உண்டு.

நீராவி இன்ஜின் ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் வழங்கப்படும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலை ரயில்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இந்த பாரம்பரிய இன்ஜின் ரயிலிலும் பயணம் செய்வார்கள் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x