Published : 13 Dec 2019 09:27 AM
Last Updated : 13 Dec 2019 09:27 AM

காப்பீடு செய்யாத வாகனம் விபத்து ஏற்படுத்தினால் அதை விற்று பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு தரலாம்: இழப்பீட்டு தீர்ப்பாய சட்டத்தை திருத்தியது தமிழக அரசு

சென்னை

காப்பீடு செய்யப்படாத வாகனம் விபத்தைஏற்படுத்தி மரணம் உள்ளிட்டவை நிகழ்ந்தால், அந்த வாகனத்தை விற்று இழப்பீடு வழங்கும் வகையில் அதற்கான சட்டத்தை தமிழக அரசு திருத்தியுள்ளது.

மோட்டார் வாகன சட்டப்படி ஒரு வாகனம் விபத்தில் சிக்கினாலோ, விபத்தை ஏற்படுத்தினாலோ அதில் சென்றவர்களுக்கு மரணம், உடல் உறுப்பு இழப்பு அல்லது சொத்து சேதம் ஏற்பட்டால் காப்பீடு நிறுவனத்தில் இருந்து உரிய இழப்பீடு பெற முடியும். ஆனால், அந்த வாகனம் காப்பீடு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அதைப் பெற முடியும். ஒருவேளை காப்பீடு செய்யப்படாமல் இருந்தால் இழப்பீடு பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

இந்த சிக்கலைப் போக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிக்கும் வகையில், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, விபத்தில் மரணம், காயம் அல்லது சொத்து சேதத்தை ஏற்படுத்திய வாகனமானது, 3-வது நபர் காப்பீடு சட்டத்தின்கீழ் வரவில்லை என்ற பட்சத்திலோ, வாகன உரிமையாளர் விபத்து விசாரணை அதிகாரியிடம் காப்பீட்டின் ஆவணங்களை அளிக்காத நிலையிலோ அந்த வாகனத்தை வெளியில் எடுத்துச் செல்ல எந்த நீதிமன்றமும் அனுமதிக்கக் கூடாது. அதேபோல், விபத்தில் ஏற்பட்ட இழப்புக்கு ஈடான பிணைத் தொகையை வாகன உரிமையாளர் செலுத்தும்வரை அந்த வாகனத்தை வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

இதுதவிர, 3-ம் நபர் காப்பீடு வாகனத்துக்கு செய்யப்படாதது, காப்பீடு ஆவணத்தை உரிமையாளர் அளிக்காமல் இருப்பது போன்ற காலகட்டத்தில், விபத்து நடந்த எல்லைப் பகுதிக்குள் வரும் மாஜிஸ்திரேட், அந்த வாகனத்தை ஏலத்தில் விற்பதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும். குறிப்பாக வாகனத்தை கைப்பற்றிய 3 மாதங்களுக்குப்பின் அதை விற்கலாம். விபத்துக்கான இழப்பீட்டை வழங்குவதற்காக அந்த விற்பனைத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தவேண்டும் என்று சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x