Published : 11 Dec 2019 12:58 PM
Last Updated : 11 Dec 2019 12:58 PM
சபரிமலைக்குச் செல்லும் வெளிமாநில ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக தெரிவிக்க தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி தெரிந்தவர்கள் சிறப்புப் பணியாளர்களாக தமிழக தகவல் மையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு வழிகாட்ட இந்து அறநிலையத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை சென்னை, தேனி-வீரபாண்டி, குற்றாலம்-புளியரை, களியக்காவிளை ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்களில் சபரிமலை தொடர்பான பூஜை விவரம், வழியில் தங்கும் இடம், போக்குவரத்து பாதை உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் சபரிமலையில் உள்ள முக்கிய தொலைபேசி எண்கள், ஊர்களின் தூரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய 15-க்கும் மேற்பட்ட அறிவிப்பு பலகைகளும் இங்கு உள்ளன.
தற்போது தேனி, தென்காசி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களிலும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
குறிப்பாக தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் ஏராளமாக வரத் தொடங்கி உள்ளனர். இவர்களுக்கு தகவல் தெரிவிப்பதில் மொழிப் பிரச்னை இருந்து வந்ததது. தற்போது இதற்காக சிறப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைத் தெரிந்து வைத்துள்ளனர். வெளிமாநில பக்தர்கள் இந்தத் தகவல் மையத்திற்கு வரும்போது இவர்கள் மூலம் சபரிமலை தொடர்பான விவரங்கள் பக்தர்களின் தாய்மொழியிலே தெரிவிக்கப்படுகிறது.
இது வெளிமாநில பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
சபரிமலைக்குச் செல்லும் வழியில் ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் 1800 425 1757 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
இந்தத் தகவல் மையமும், சேவையும் ஜனவரி 20-ம்தேதி வரை செயல்படும் என்று இந்து சமய அறவிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT