Published : 11 Dec 2019 10:02 AM
Last Updated : 11 Dec 2019 10:02 AM

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்தில் நித்யானந்தாவின் வெளிநாட்டு பக்தர்கள் வந்து தங்கியுள்ளனர்- கோசாலை கட்டும் பணி முடியும் வரை தங்கியிருக்கப் போவதாக தகவல்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் உள்ள மிகப் பழமையான மடங்களில் ஒன்றான தொண்டை மண்டல ஆதீன மடத்தில், நித்யானந்தாவின் வெளிநாட்டு பக்தர்கள் சிலர் உள்ளூர் பக்தர்களுடன் தங்கியுள்ளனர். வேறு சிலர் அவ்வப்போது வந்து செல்வதும் இந்தப் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘கைலாசா' என்ற புதிய நாட்டை உருவாக்கும் முயற்சியில் நித்யானந்தா ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சில இணையதளங்களும் தொடங்கப்பட்டுள்ளன. அவர் ஈக்வடார் நாட்டில் இருந்ததாகவும், பின்னர் கரீபியன் தீவு பகுதியில் இருப்பதாகவும் பல்வேறு விதமான தகவல்கள் பரவிவருகின்றன. அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. இந்நிலையில் அவரது சீடர்கள் காஞ்சிபுரத்தின் பழமையான மடங்களில் ஒன்றான தொண்டை மண்டல ஆதீன மடத்தில் தங்கி இருப்பதும் அவர்களுடன் சில வெளிநாட்டு பக்தர்கள் வந்து தங்கி இருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த மடத்தின் 232-வது ஆதீனமான ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது:

நித்யானந்தா இந்த மடத்தின் இளைய மடாதிபதியாக வர விரும்பினார். அதை நான் ஆதரிக்கவில்லை. அதன் பின்னர்தான் அவர் பிடதியில் மடம் கட்டினார். அவர் மடத்தில் முக்கிய நிகழ்வுகளின்போது என்னை அழைப்பார். அப்போது, அவரிடம் நேரில் சந்தித்து பேசியுள்ளேன். கடைசியாக அவரை கடந்த ஆண்டு ஜனவரியில் பார்த்தேன். அதன் பிறகு பார்க்கவில்லை. தொலைபேசியிலும் பேசுவதில்லை.

அவர் புதிதாக நாட்டை உருவாக்கி இருப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், அவர்கள் இந்துக்களுக்காக ஒரு நாடு உருவாக்குவதை நான் வரவேற்கிறேன். இந்து மதம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதற்கென ஒரு நாடு உருவாகிறது என்றால் அது வரவேற்கக் கூடிய அம்சம்தான்.

‘கைலாசா’ நாட்டுக்கு செல்வேன்நித்யானந்தா உருவாக்கும் நாட்டை அவர் செலவில் பார்வையிட அழைப்புவிடுத்தால் சென்று வருவேன். இந்த மடத்தின் செலவில் செல்லமாட்டேன். நித்யானந்தா சீடர்கள் இங்கு எனது விருப்பத்துடன்தான் தங்கியுள்ளனர். இருவர் மட்டுமே உள்ளனர். அவர்கள் உணவு சமைக்கும்போது எனக்கும் சேர்த்து சமைக்கின்றனர். அவர்களின் மடத்தின் சார்பில் காரை கிராமத்தில் கோசாலை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணி முடிந்ததும் அவர்கள் சென்றுவிடுவார்கள் என்றார்.

நித்யானந்தா சீடர்களின் கட்டுப்பாட்டில் நீங்கள் இருப்பதாக சிலர் கூறுகிறார்களே என்று கேட்டதற்கு, "இந்த மடம் எனது தலைமையில் இயங்கும் மடம்; என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x