Published : 11 Dec 2019 08:58 AM
Last Updated : 11 Dec 2019 08:58 AM

முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் முதல் முறையாக நடவடிக்கை; விபத்தில் காலை இழந்தவருக்கு அதிநவீன செயற்கை கால்: சென்னை அரசு பொது மருத்துவமனையில் 3 மாதம் சிகிச்சை 

விபத்தில் காலை இழந்த ஹேம்நாத் என்பவருக்கு அதிநவீன செயற்கை கால் பொருத்தப்பட்டது குறித்து விளக்குகிறார் சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் ஜெயந்தி. கண்காணிப்பாளர் நாராயணசாமி, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை டாக்டர் எஸ்.ஸ்ரீ தேவி. படம்: க.ஸ்ரீபரத்

சென்னை

விபத்தில் சிக்கி காலை இழந்த இளைஞருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி, முதல் முறையாக அதிநவீன செயற்கை கால் பொருத்தப்பட்டது.

திருவள்ளூரைச் சேர்ந்த ஹேம் நாத், கடந்த ஜூலை 2-ம் தேதி நடந்த பைக் விபத்தில் சிக்கி சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இடும்பு எலும்பு முறிந்து, வலது காலுக்கு செல்லும் ரத்தநாளம் முழுமையாக சேதமடைந்திருப்பது தெரியவந்தது. இதனால், அவரது காலை எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, மருத்துவமனை டீன் ஜெயந்தி, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ஜெகன்மோகன் ஆலோசனையின் படி பேராசிரியரும் டாக்டருமான எஸ்.தேவி, மயக்க டாக்டர் வெள்ளிங்கிரி ஆகியோர் அவரது வலது காலை முட்டிக்குமேல் வரை அகற்றினர். காயத்துக்கு தேவையான சிகிச்சை அளித்தனர். காயம் முற்றிலுமாக குணமான பின்னர், அதிநவீன முறையில் தயாரிக்கப்பட்ட செயற்கை காலை அவருக்கு பொருத்தினர்.

இந்த சிகிச்சை தொடர்பாக டீன் ஜெயந்தி, டாக்டர்கள் ஜெகன் மோகன், எஸ்.தேவி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரூ.1.77 லட்சம் மதிப்பு

தொடையின் மற்ற பகுதிகளில் இருந்து தோல் எடுத்து அந்த காயம் சரி செய்யப்பட்டது. சீழ் உறிஞ்சும் உபகரணம் மூலம் உள்ளிருந்த கழிவுகள் நீக்கப்பட்டன. பின்னர், ரூ.1.77 லட்சம் மதிப்புள்ள அதி நவீன செயற்கை கால் பொருத்தப் பட்டது. பழைய செயற்கைக்கால் பொருத்தினால் முழங்கால் மற்றும் கணுக்காலை மடக்க முடியாது. எடையும் 10 கிலோவுக்கு இருக்கும். இந்த அதிநவீன செயற்கை காலை முழங்கால், தொடைப் பகுதிகளில் மடக்க முடியும்.

ஒவ்வொரு நபரின் எடையைப் பொறுத்து இதன் எடையை மாற்றியமைக்க முடியும். இவருக்கு பொருத்தப்பட்டுள்ள செயற்கை காலின் எடை 1.5 கிலோ ஆகும். முதலமைச்சரின் விரிவான மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் முதல்முறையாக அதிநவீன செயற் கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு 4 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் 3 மாதங்க ளுக்கு மேல் இவருக்கு அளிக்கப் பட்ட சிகிச்சையை தனியார் மருத் துவமனையில் பெறுவதற்கு பல லட்சங்கள் செலவாகி இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

செய்தியாளர் சந்திப்பின்போது மருத்துவமனை மருத்துவக் கண் காணிப்பாளர் நாராயணசாமி, மயக்க டாக்டர் வெள்ளிங்கிரி மற்றும் ஹேமநாத்தின் பெற்றோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து விபத்தில் பாதிக்கப்பட்ட ஹேம்நாத் கூறும்போது, “நான் பிசிஏ முடித் துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். விபத்தில் காலை இழந்த தால் மிகவும் வேதனையில் இருந் தேன். இந்த அதிநவீன செயற்கை காலால் தானாக எழுந்து நிற்க உட்கார நடக்க முடிக்கிறது. நான் மீண்டும் வேலையில் சேர முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x