Published : 10 Dec 2019 01:20 PM
Last Updated : 10 Dec 2019 01:20 PM
குடியுரிமை சட்டத்திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடமளிக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (டிச.10) வெளியிட்ட அறிக்கையில், "குடியுரிமை சட்டத்திருத்த விவகாரத்தை மதத்தின் அடிப்படையில் அணுகாமல், மனிதநேயத்தின் அடிப்படையில் மத்திய அரசு கையாள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்தவர், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர் ஆகியோர் 5 ஆண்டுகள் இங்கே வசித்தாலே இந்திய குடியுரிமை வழங்கலாம் என்று குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்திருக்கிறது.
ஆனால், பன்னெடுங்காலமாக இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களும், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் இதில் விடுபட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தச் சட்டத்திருத்தம் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டால் மட்டுமே இந்தியா மதச்சார்பின்மையை, சமய நல்லிணக்கத்தைப் போற்றுகிற தேசம் என்பது உறுதியாகும். எனவே, மத்திய அரசு இப்பிரச்சினையைத் தாயுள்ளத்தோடு அணுகிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT