Published : 10 Dec 2019 10:45 AM
Last Updated : 10 Dec 2019 10:45 AM

தொடரும் திருட்டு சம்பவங்கள்: பயங்கர ஆயுதங்களுடன் வலம் வரும் சந்தன மரக் கடத்தல் கும்பல்?

கோவை

கோவை மாநகரில் சந்தன மரக்கடத்தலில் ஈடுபடும், கும்பலை விரைவில் பிடித்து கைது செய்ய, காவல்துறைக்கு சமூகஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகரில், மாநகராட்சி பூங்காக்கள், தனிநபர் இல்லங்கள், அரசு அலுவலர்களின் குடியிருப்பு வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மர்மநபர்கள் இந்த சந்தன மரங்களை குறிவைத்து வெட்டி கடத்துகின்றனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும், ஆர்.எஸ்.புரம், சாயிபாபா காலனி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு சிலவற்றை தவிர, பல வழக்குகளில் குற்றவாளிகள் யார் என்றே, இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலை உள்ளது. நீலிக்கோணாம் பாளையத்தை தொடர்ந்து, நேற்று கோவைப்புதூரிலும் சந்தன மரங்கள் கடத்தப்பட்டுள்ளன.

கோவைப்புதூர் எக்ஸ் பிளாக்கைச் சேர்ந்த சர்வேஷ் மைக்கேல் என்பவரது வீட்டில் உள்ள 2 மரங்கள், அருகேயுள்ள டேவிட் என்பவரின் வீட்டில் ஒரு மரம் என நேற்று அதிகாலை வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன. இதற்கருகேயுள்ள வீட்டிலும் சந்தன மரத்தை வெட்டியுள்ளனர். ஆனால், ஆட்கள் திரண்டதால் வெட்டிய மரத்தை அங்கேயே போட்டுச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

ஆயுதங்களுடன் வலம்

சமூகஆர்வலர்கள் சிலர் கூறும்போது,‘‘கத்தி, வீச்சரிவாள், மரம் அறுக்கும் சிறிய ரம்பம் போன்றவற்றுடன், நான்கு சக்கர வாகனங்களில் வலம் வரும் மர்மநபர்கள், காவல்துறை கண்காணிப்பையும் மீறி, சந்தன மரங்களை லாவகமாக வெட்டிக் கடத்தி விடுகின்றனர். சந்தன மரத்தை வெட்ட கும்பலாக செல்கின்றனர். முகமூடி அணிந்து கொண்டு, கையில் பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டு சிலர் சாலைகளில் மறைந்து இருந்து, ஆட்கள் வருகிறார்களா எனக் கண்காணிக்கின்றனர். சிலர் அருகேயுள்ள குடியிருப்புகளின் கதவை வெளிப்பகுதிகளை தாழிடுகின்றனர். சிலர் இயந்திரத்தை பயன்படுத்தி சரசரவென மரத்தை வெட்டுகின்றனர். வெட்டி முடிந்ததும், அந்த மரத்துண்டை எடுத்துக் கொண்டு வாகனங்களில் தப்பி விடுகின்றனர்.

கடந்த வாரம் நீலிக்கோணாம் பாளையத்தில் சந்தன மரம் கடத்தலில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பிடிக்க முயன்ற சில இளைஞர்களை, ஆயுதங்களை காட்டி அக்கும்பல் மிரட்டி தப்பிச் சென்றுள்ளது. ஆந்திராவில் காவல்துறையின் கண்காணிப்பை தீவிரப்படுத்தியதால், அங்கு செம்மரத்தை வெட்ட செல்லும் கும்பல், சந்தனமரத்தை வெட்ட கோவைக்கு வரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட சந்தன மரத்தை வெட்டிய சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், சந்தனமரத்தை வெட்ட இவர்களை அனுப்பிய கும்பல் தலைவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வலம் வரும் இவர்களால் பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சந்தன மரக்கடத்தலில் ஈடுபடும் நபர்களை காவல்துறையினர் விரைவாக கைது செய்ய வேண்டும்,’’ என்றனர்.

ரோந்துப் பணி தீவிரம்

மாநகர காவல்துறை துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) பாலாஜி சரவணன் கூறும்போது,‘சந்தன மரக்கடத்தல் சம்பவங்களை தடுக்க, மாநகரில் காவல்துறையினரின் இரவு ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்துப்பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிரந்த சோதனைச்சாவடி மட்டுமின்றி, தற்காலிக இடங்களிலும் வாகனச் சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x