Published : 09 Dec 2019 01:49 PM
Last Updated : 09 Dec 2019 01:49 PM
உள்ளாட்சித் தேர்தலை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடத்தாமல் மீண்டும் பழைய பாணியில் தங்கள் இஷ்டத்திற்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என குற்றம் சாட்டிய திமுக, மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இம்முறை கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து வழக்கில் இணைந்துள்ளன. இதுகுறித்த வழக்கு டிச.11 (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களைக் காட்டி திமுக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்திக் கொள்ளலாம், இட ஒதுக்கீடு தொகுதி மறுவரையறை முடிக்கவேண்டும், புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.
மீண்டும் மறு அறிவிப்பாணையை கடந்த 7-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் உச்ச நீதிமன்ற உத்தரவு எதையும் பின்பற்றாமல் தேர்தலை அறிவித்துள்ளது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
நேற்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் முன்னதாக தெரிவித்தபடி, உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க தயாராக தங்கள் கட்சி உறுப்பினர்கள் இருப்பதாகவும், ஆனால் தேர்தல் முறைப்படி நடத்தப்படவேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தை நாட வேண்டும் என்ற முடிவை அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒருமனதாக ஏற்றுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று திமுக சார்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு ஒன்று செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வீ தலைமை நீதிபதி அமர்வுமுன் முறையீட்டைச் செய்தார். இம்முறை திமுக காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து தலைமை நீதிபதி அமர்வு முன் முறையீடு செய்துள்ளன.
அவர்களது மனுவில், “உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்காமல் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும், விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு வேண்டும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்க வேண்டும், ஆனால் தமிழக அரசு 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்கிறது” என குற்றம் சாட்டியுள்ளனர்.
அபிஷேக் சிங்வீயின் முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு வழக்கை டிச.11 (புதன்கிழமை) விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
முன் கதை:
தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2011-ம் ஆண்டுக்குப் பின் 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டியது நடத்தவில்லை. தொகுதி மறுவரையறை, இட ஒதுக்கீடு போன்றவற்றைக் கடைப்பிடிக்காமல் தேர்தலை அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக தொடர்ந்த வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கிய நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவிட்டது.
இதையடுத்து டிச. 2-ம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடுவதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் காஞ்சிபுரம், நெல்லை, வேலூர் மாவட்டங்கள் 7 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. டிச.2 அன்று ஊரக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடத்துவதாக அறிவித்த ஆணையம் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தலை அறிவிக்கவில்லை.
இதனிடையே புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களைக் காட்டி திமுக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்திக்கொள்ளலாம், இட ஒதுக்கீடு தொகுதி மறுவரையறை முடிக்க வேண்டும், புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.
மீண்டும் மறுஅறிவிப்பாணையை கடந்த 7-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் உச்ச நீதிமன்ற உத்தரவு எதையும் பின்பற்றாமல் தேர்தலை அறிவித்துள்ளது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் முறையீடு ஏற்கப்பட்டுள்ளது. அபிஷேக் சிங்வீயின் முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு வழக்கை டிச.11 (புதன்கிழமை) விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT