Published : 09 Dec 2019 12:42 PM
Last Updated : 09 Dec 2019 12:42 PM
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக வெளியிட தடைகோரிய ஜெ.தீபாவின் மனுவுக்கு டிசம்பர் 11-ம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் "தலைவி" என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்-யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனும் இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் தலைவி, ஜெயா, குயின் ஆகியவற்றை தயாரிக்கவோ, விளம்பரப்படுத்தவோ, திரையிடவோ கூடாது என தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் மனுவில் ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா? என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர ஜெ.தீபாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் கௌதம் வாசுதேவ மேனனின் இணையதளத்தொடர் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதை எதிர்த்து ஜெ.தீபா புதிய மனு ஒன்றைத்தாக்கல் செய்தார்.
அந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் ஜெ.தீபா தரப்பில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கும் பணிகள் தற்போதுதான் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், ஆனால் இணையதள தொடர்களாக தயாரிக்கப்பட்டவை வரும் சனிக்கிழமை வெளியிட உள்ளதாக தகவல் வந்துள்ளதால், தன் மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அப்போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில், தீபா தொடர்ந்த வழக்கின் ஆவணங்கள் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்த நீதிபதி, வழக்கு ஆவணங்களை கௌதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உடனடியாக கொடுக்க தீபா தரப்புக்கும், அந்த மனுவுக்கு பதில் மனுத்தாக்கல் செய்ய கௌதம் மேனன் தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT