Published : 09 Dec 2019 12:19 PM
Last Updated : 09 Dec 2019 12:19 PM

ஆக்கிரமிப்பு வாகனங்கள் ஏலம் விட்ட தொகை ரூ.68.33 லட்சம்: சிசிடிவி பொருத்த காவல்துறைக்கு வழங்கினார் மாநகராட்சி ஆணையர்

சென்னை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட 3,079 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது, இதில் வசூலான பங்கீட்டு தொகை ரூ.68.33 இலட்சத்திற்கான காசோலையினை கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்காக ஆணையர் பிரகாஷ், சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதனிடம் வழங்கினார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்டமாக போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு, யாரும் உரிமை கோராத 3,079 வாகனங்கள் ஏலம் நடத்தி தீர்வு செய்ததில் கிடைக்கப்பெற்ற நிகரத் தொகை ரூ.91.11 இலட்சத்தில் 75 சதவீத பங்கீட்டுத் தொகையான ரூ.68.33 இலட்சத்திற்கான காசோலையினை பெருநகர சென்னை காவல்துறைக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்காக ஆணையர் பிரகாஷ், இன்று (09.12.2019) சென்னை காவல் ஆணையாளர் .கே.விஸ்வநாதனிடம் வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களை சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்கள் ஆகியவற்றில் நிறுத்தி வைத்துள்ளதை தொடர்ந்து, வாகனங்களின் உரிமையாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை காவல்துறையால் சாலைகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த யாரும் உரிமை கோராத வாகனங்கள் (இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்) அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில், முதற்கட்டமாக 7,875 வாகனங்களை பெருநகர சென்னை காவல்துறை அப்புறப்படுத்தி பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைத்தது. இதன்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஏலம் நடத்தி தீர்வு செய்யப்பட்டதில், நிகரத்தொகையாக ரூ.2.14 கோடி கிடைக்கப்பெற்றது. இத்தொகையில், 75 சதவிகித பங்கீட்டு தொகையான ரூ.1.60 கோடியினை பெருநகர சென்னை காவல் துறைக்கு மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் பொருட்டு சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்கு வழங்கப்பட்டது.

தற்போது, இரண்டாம் கட்டமாக அப்புறப்படுத்தப்பட்ட யாரும் உரிமை கோராத 3,079 வாகனங்களை பெருநகர சென்னை மாநகராட்சி ஏலம் நடத்தி தீர்வு செய்ததில் கிடைக்கப்பெற்ற நிகரத்தொகையான ரூ.91.11 லட்சத்தில் 75 சதவிகித பங்கீட்டு தொகையான ரூ.68.33 லட்சத்தை பெருநகர சென்னை காவல்துறைக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்காக வழங்கப்பட்டது.

இதன் மூலம், 2018-ம் ஆண்டுமுதல் இதுநாள்வரை மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10,954 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏலம் நடத்தி தீர்வு செய்ததில் கிடைக்கப்பெற்ற மொத்த நிகரத்தொகை ரூ.3.05 கோடியில் 75 சதவிகிதமான ரூ.2.28 கோடி பெருநகர சென்னை காவல்துறைக்கு பொதுமக்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்காக பெருநகர சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x