Published : 09 Dec 2019 09:29 AM
Last Updated : 09 Dec 2019 09:29 AM
மு. யுவராஜ்
மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து தேர்தலை புறக்கணிப்பது ஏன் என்பதற்கான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்கள் நீதி மய்யம் கடந்த ஆண்டு கமல்ஹாசனால் தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கிய ஓராண்டில் மக்களவை தேர்தலை சந்தித்து, 3.72 சதவீதம் வாக்குகளை பெற்றது. நகர்ப்புறங்களில் சில தொகுதிகளில் பிரதான கட்சிகளுக்கு அடுத்த இடத்தை பிடித்தது.
இருப்பினும், கிராமப்புறங்களில் எதிர்பார்த்த அளவு வாக்குகளை பெறவில்லை. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நடைபெற்ற வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் என எந்த தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை.
இந்நிலையில் புதிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு வந்தார். எனவே, உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்று கமல்ஹாசன் நேற்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டு கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் முழுமையாக நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. குறிப்பாக, கிராமப்புறங்களில் கட்சியின் கட்டமைப்பு முழுமையாக பலப்படுத்தப்படவில்லை. இவ்வாறு இருக்க உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால் கட்சி நிர்வாகிகள் பணத்தை செலவு செய்ய வேண்டும்.
தற்போது பணத்தை செலவு செய்துவிட்டு பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டால் தொண்டர்களும் சோர்ந்து விடுவார்கள். ஏற்கெனவே, மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகள் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளை உற்சாகத்துடன் வைத்துள்ளது.
இவ்வாறு, இருக்க கட்டமைப்பு காரணமாக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தால், அது சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும். குறிப்பாக, ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்கும் எண்ணத்தில் உள்ளார். அவ்வாறு, அவர் கட்சி தொடங்கினால் ரஜினிகாந்துடன் இணைந்து 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பதற்காக கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.
எனவே, மக்கள் நீதி மய்யத்துக்கு இருக்கும் வாக்கு சதவீதம் எக்காரணம் கொண்டும் குறைந்துவிடக்கூடாது. அப்போதுதான் இருவரும் கூட்டணி அமைத்தாலும் முக்கிய பொறுப்பில் யாரை நியமிப்பது என்ற விவாதம் வரும் போது மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வாதங்களை எடுத்து வைக்க முடியும் என்று கமல்ஹாசன் கருதுகிறார். எனவே, கட்டமைப்பை முழுமையாக பலப்படுத்தும் வரை சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு எந்த தேர்தலாக இருந்தாலும் போட்டியிடுவது சந்தேகம்தான்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT