Published : 09 Dec 2019 09:13 AM
Last Updated : 09 Dec 2019 09:13 AM
திருமாலின் மச்ச. கூர்ம, வராக,நரசிம்ம மற்றும் வாமன அவதாரங்களின் மரபு கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
கேந்திரிய வித்யாலயா சங்கதன் சென்னை மண்டல துணை ஆணையர் சி.மணி, மரபு கவிதை முறையில் ‘திருமாலின் மச்ச, கூர்ம, வராக அவதாரங்கள்’ மற்றும் ‘திருமாலின் நரசிம்ம, வாமன அவதாரங்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:விஷ்ணு அவதாரங்களில் வாமனஅவதாரம்தான் மையமாக உள்ளது.மிருக நிலையில் இருந்து மனித நிலைக்கு முழுமையாக பரிணாம வளர்ச்சி அடைந்த அவதாரமும் அதுதான். அதனால் வாமன அவதாரத்தை அடிப்படை நிலை யாகவே பல்வேறு அறிஞர்கள், புலவர்கள் கருதுகின்றனர். அதன் படியே இந்நூலும் வாமன அவதாரத்தில் இருந்துதான் தொடங் கப்பட்டுள்ளது.
தமிழ் பா வகைகளில் கையாள் வதற்கு மிக கடினமான கொச்சக கலிப்பா வழிமுறையில் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் அறிஞர் கள், பேராசிரியர்கள்கூட இவ்வகை கலிப்பாவில் தற்போது பாடல்களை இயற்றுவதில்லை. ஏனெனில், கொச்சக கலிப்பா முறையில் எழுத சில வரையறைகள் உள்ளன. அதை சரியாக கையாண்டு நூல் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
ஒரு கவிதையை படிக்கும்போது அதனுள் ஈர்க்கப்பட்டு நம் மனதை அந்தச் சூழலுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதுதான் சிறந்த கவிதையின் பெருமையாகும். இந்நூலைப் படிக்கும்போது அந்த உணர்வு நமக்கு கிடைக்கும்.
ஏற்கெனவே சொல்லப்பட்ட காவியங்களை மீண்டும் கவிதையாக கூறுவது சிரமம். பழைய நூல்களின் சாயலும் வரக்கூடாது. அதேநேரம் மூலக்கதையும் மாறிவிடக்கூடாது. அதையெல்லாம் சிறப்பாக ஆசிரியர் கையாண்டுள்ளார்.
பாகவதத்தில்கூட இல்லாதகூடுதல் தகவல்களுடன் அவதாரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய வார்த்தைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொன்னால் இந்நூல் மூலம் தெய்வீகமும், தமிழும் இணைக்கப்பட்டுள்ளன. நம் புராணக் காவியங்களில் அறிவியல், மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்துள்ளன. அவற்றை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கேந்திரிய வித்யாலயா சங்கதன் மண்டல உதவி ஆணையர் எம்.ராஜேஸ்வரி பேசும்போது, ‘‘தமிழ்மொழிதான் நமக்கான அடையாளம். செம்மொழியான தமிழில்சிறப்புமிக்க பல்வேறு இலக்கியங்கள் உள்ளன. தமிழைப்பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம். இத்தகைய நூல்கள் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும். இதேபோல், அறிவியல், கணிதம் உட்பட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள் அவரவர் தாய்மொழிகளில் அது தொடர்பான படைப்புகளை உரு வாக்க வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் மண்டல இயக்குநர் (ஓய்வு) ஜெயராமன், கேந்திரிய வித்யாலயா சங்கதன் சென்னை மண்டல உதவி ஆணையர்கள் இரா.செந்தில் குமார், டி.பிரம்மானந் தம், ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் மாணிக்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT