Published : 09 Dec 2019 08:43 AM
Last Updated : 09 Dec 2019 08:43 AM
வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக விரைவு நீதிமன்றங்களை அதிகமாக ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்திய நராராயணன் தெரிவித்தார்.
தாம்பரம் நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நடுவர், மாவட்ட முன்சிப் மற்றும் சார்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல்லாவரம், சங்கர் நகர், குரோம்பேட்டை, சிட்ல பாக்கம், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகும் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இங்கு6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படுவதால், காலதாமதத்தை தவிர்க்க கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இதையடுத்து, தற்போதுள்ள நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் இந்த கூடுதல் நீதிமன்றத்தை திறந்து வைத்தனர்.
விழாவில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் பேசியதாவது:
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கஏதுவாக தமிழக அரசு விரைவு நீதிமன்றங்களை அதிகமாகக் கொண்டுவர வேண்டும். குறிப்பாக மகளிர், பாலியல்,முதியோர், ஊனமுற்றோர், பின்தங்கியவர்கள் போன்ற வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் ஆன்லைன் நீதிமன்றங்களால் விரைவான தீர்வு கிடைக்கிறது. வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு இடையே நல்ல உறவு இருக்க வேண்டும். இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.
வழக்கறிஞர்கள் அடிக்கடி வாய்தாவாங்காமல், வழக்குகளை விரைவாக முடிக்க நீதிமன்றங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். வாட்ஸ்அப் பயன்படுத்துவதை விட, சட்ட புத்தங்களை வழக்கறிஞர்கள் அதிகம் படிக்க வேண்டும். ஆதாரம் இல்லாமல், நீதிமன்றத்தின் மீதோ ஊழியர்கள் மீதோ பழி போடக்கூடாது. விபத்து வழக்கில் உடல் கூராய்வு முடிவுகளை விரைந்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நிவாரணம் கிடைக்கும். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன், சென்னை மாநகரகாவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்,காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வுநீதிபதி வசந்த லீலா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ், கூடுதல் மாவட்ட நீதிபதி ராமநாதன், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜா, தலைமை குற்றவியல் நடுவர் கபீர்,மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், குடும்ப நல நீதிபதி கீதா ராணி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் உமா மகேஸ்வரி, கூடுதல் சார்பு நீதிபதி அனுஷா வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சி.பி. ஸ்ரீராமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT