Published : 09 Dec 2019 08:17 AM
Last Updated : 09 Dec 2019 08:17 AM

100 சதவீதம் பணமில்லா பணப் பரிவர்த்தனை திட்டம்; விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்த முடிவு: பிற மாவட்டங்களுக்கும் அடுத்தகட்டமாக விரிவுபடுத்த ஏற்பாடு

கோப்புப்படம்

சென்னை

ப.முரளிதரன்

மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், ஒரு மாவட்டத்தை தேர்வு செய்து அங்கு 100 சதவீத மின்னணுப் பணப் பரிமாற்றம் செய்யும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, மத்திய அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கடந்த 2016-ம் ஆண்டு நவ.8-ம் தேதி அறிவித்தது. அதன் பிறகு, ரொக்கப் பணப் பரிவர்த்தனையைக் குறைத்து மின்னணு (டிஜிட்டல்) பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது.

எனினும், மின்னணுப் பணப் பரிவர்த்தனைக்கு பொதுமக்கள் இன்னும் முழுமையாக மாறவில்லை. எனவே, மத்திய அரசு 100 சதவீதம் மின்னணுப் பணப் பரிவர்த்தனையை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரு மாவட்டத்தை தேர்வு செய்து அங்கு 100 சதவீதம் மின்னணுப் பணப் பரிவர்த்தனை செய்யும் மாவட்டமாக மாற்ற உள்ளது.

இதுகுறித்து, மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசின் மின்னணுப் பரிவர்த்தனையை முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, ஒரு மாவட்டத்தை தேர்வு செய்து 100 சதவீத மின்னணுப் பணப் பரிவர்த்தனையை செயல்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு குழுவை இம்மாத இறுதிக்குள் ஏற்படுத்தும்படி, மத்திய ரிசர்வ் வங்கி அனைத்து மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்புக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்தக் குழுவில், மாநில தொழில்நுட்பத் துறை அதிகாரிகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், நபார்டு வங்கி, என்பிசிஎல் நிறுவனம் மற்றும் முன்னணி வங்கிகளின் உயர் அதிகாரிகள் இடம் பெறுவர்.

அனைத்து இடங்களிலும்...

இத்திட்டத்தின்கீழ், தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், சிறிய கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை நடைபெறும் அனைத்து இடங்களிலும் மின்னணுப் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதற்காக, பாயின்ட் ஆஃப் சேல்ஸ் எனப்படும் கருவிகளை முழு அளவில் பயன்படுத்துவது, பணப் பரிவர்த்தனை நடைபெறும் அனைத்து இடங்களிலும் இணையதள வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மேலும், உள்ளூர் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள், கூட்டங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களிடையே இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அத்துடன், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலமாகவும் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

அத்துடன், வங்கி ஊழியர்களுக்கும் இதுதொடர்பாக பயிற்சி அளிக்கப்படும்.

விருதுநகர் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, அவ்வங்கி சார்பில், ஓர் அதிகாரி நியமிக்கப்படுவார். ஓராண்டு காலத்துக்குள் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து எதிர்காலத்தில் பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x