Published : 05 Dec 2019 04:49 PM
Last Updated : 05 Dec 2019 04:49 PM
தொடர் மழையின் காரணமாக ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான தீர்த்தங்கள் நிரம்பத் தொடங்கியுள்ளன.
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தொடர்புடைய 108 புனித தீர்த்தக்குளங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன.
இவற்றில் ராமநாதசுவாமி கோவிலின் உள்ளே அமைந்துள்ள 22 தீர்த்தங்களும் இதில் அடக்கம். முன்பு ராமேசுவரத்துக்கு தீர்த்தமாட வருபவர்கள் ஒரு மாத காலம் தங்கி 108 தீர்த்தங்களிலும் தங்களின் பாவங்கள், தோஷங்களைப் போக்கி விட்டுச் செல்வார்கள்.
இந்த 108 தீர்த்தங்களில் சில தீர்த்தங்கள் தனியார் ஆக்கிரமிப்பு, இயற்கை சீற்றங்களினால் அழிவுக்குள்ளாகியும் இருந்தன. இந்த தீர்த்தங்களை கண்டுபிடித்து, முட்புதர்களை அகற்றி, சுற்றுச்சுவர் எழுப்பி, பக்தர்கள் செல்ல ஏதுவாக 1.5 கோடி ரூபாயில் புனரமைக்கும் பணியை விவேகானந்த கேந்திரம் பசுமை ராமேசுவரம் திட்டத்தின் கீழ் கடந்த 5 வருட காலமாக அதன் பொறுப்பாளர் சரஸ்வதி அம்மாள் தலைமையில் ஈடுபட்டு வருகிறது.
அர்ஜூனா தீர்த்தம்
இதுவரையிலும் 30 தீர்த்தங்கங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. இதில் சர்வரோக நிவாரண, பரசுராம், ஞானவாதி ஆகிய தீர்த்தங்களில் முழுமையாக மணலில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது. இந்த 30 தீர்த்தங்களையும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அர்பணித்தார்.
ஆனால் ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக பருவ மழை சரி வர பெய்யாததால் பல தீர்த்தங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததுடன், சில தீர்த்தங்கள் வறண்டும் போயின.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராமேசுவரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பெய்த வடகிழக்குப் பருவமழையினால் பெய்த கனமழையினால் பசுமை ராமேசுவரம் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட அனைத்து தீர்த்தங்களும் நிரம்பத் துவங்கியுள்ளன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எஸ். முஹம்மது ராஃபி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT