Published : 05 Dec 2019 01:05 PM
Last Updated : 05 Dec 2019 01:05 PM
அதிமுகவை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம் என, ஜெயலலிதா நினைவு தினத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.5) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, இன்று காலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை அமைதி பேரணி மேற்கொண்டனர்.
அதிமுகவினர் அமைதி பேரணி படம்: எல்.சீனிவாசன்
இதன்பிறகு, ஜெயலலிதா நினைவிடத்தில், எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அருகே அமைக்கப்பட்ட மேடையில், ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க மற்றவர்களும் உறுதிமொழி ஏற்றனர்.
அந்த உறுதிமொழியில், "ஜெயலலிதாவால் தமிழ்நாடு அடைந்திட்ட வளர்ச்சிகளை, மக்களுக்கு எந்நாளும் எடுத்துக் கூறிட, உறுதி ஏற்கிறோம்.
ஜெயலலிதா வழியில் கட்சிப் பணிகளை தொடர்ந்து ஆற்றிடுவோம்.
ஜெயலலிதாவின் மகத்தான தியாகத்தை, மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுவோம். ஜெயலலிதாவின் நிலைத்த புகழுக்குப் பெரும் புகழ் சேர்ப்போம்.
ஜெயலலிதாவின் கட்டளையை ஏற்போம். ஒற்றுமையுடனும், உறுதியுடனும் கட்சிப் பணிகளை ஆற்றிடுவோம்.
தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் மக்கள் நலப் பணிகளை, பட்டி தொட்டி எங்கும் எடுத்துரைப்போம். தமிழக மக்களிடையே, அதிமுக அரசுக்கு, மென்மேலும் நல்லாதரவு பெருகிட, அயராது பணியாற்றுவோம்.
அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு படம்: எல்.சீனிவாசன்
ஜெயலலிதா அமைத்துத் தந்த அதிமுக அரசினை வெற்றிமேல் வெற்றி பெறச் செய்வோம்.
அதிமுகவின் உண்மைத் தொண்டராகவும், நம்பிக்கைக்குரிய விசுவாசியாகவும், தொடர்ந்து உழைத்திடுவோம்.
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்று, ஜெயலலிதாவின் வழியில், அதிமுகவை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம்.
ஜெயலலிதாவின் வழியில் சாதனை படைப்போம்" என உறுதிமொழி ஏற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT