Published : 05 Dec 2019 11:27 AM
Last Updated : 05 Dec 2019 11:27 AM

வைகை ஆற்றில் வந்த நீர் ஷட்டரில் திறந்து விடப்பட்டதால் மதுரையில் நிலத்தடி நீர் ஆதாரம் உயர்ந்ததா?

மதுரை

மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டிய தடுப்பணைகளில் தண்ணீரைத் தேக்கி வைக்காமல் ‘ஷட்டர்’ வழியாகத் திறந்து விடப் பட்டதால், நகரின் நீர் ஆதாரத்தை ஒரு அடிக்குக் கூட மேம்படுத்த முடியவில்லை. தடுப்பணைகளில் கழிவுநீர் மட்டும் தேங்கி நகரின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நகரங்களில் நிரந்தரமாக நிலத் தடி நீர்மட்டத்தை மேம்படுத்த முக்கிய ஆறுகளின் குறுக்கே ரூ.1,000 கோடி செலவில் 75 தடுப்பணைகளை கட்டும் பணி தொடங்கி உள்ளது. இந்த திட்ட த்தில், முதற்கட்டமாக மதுரை வைகை ஆற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டப்பட்டன. முதல் தடுப்பணை ஏவி மேம்பாலம் அருகே மேல் பகுதியில் ரூ.10.48 கோடி செலவிலும், மற்றொரு தடுப்பணை ஒபுளா படித்துறையின் கீழ் பகுதியில் ரூ.9.80 கோடி செலவிலும் கட்டப்பட்டது.

இந்த தடுப்பணைகளில் குறைந்தபட்சம் 50 மில்லியன் கன அடி முதல் 300 மில்லியன் கன அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். ஆனால், இதுவரை தண்ணீரைத் தேக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த தடுப்பணைகள் மூலம் நகர் பகுதியில் 3 கி.மீ. தூரம் தண்ணீரை நிரந்தரமாகத் தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், வைகை அணை கட்டியதின் நோக்கமே ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தண் ணீர் வழங்கவே என்பதால், தடுப்பணையில் தண்ணீரைத் தேக்கினால் அது சட்டவிரோதமாகி விடும் என்பதால் தண்ணீரைத் தேக்க பொதுப்பணித் துறை தயங்குவதாகக் கூறப்படுகிறது.

அதனால், இந்த தடுப்பணை களால் நிலத்தடி நீர்மட்டம் உயர வில்லை. மாறாக கழிவு நீர் தேங்கி நகரின் சுகாதாரம் பாதிக் கப்பட்டதே மிச்சம்.

இதுபற்றி பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சுப்பிரம ணியன் கூறுகையில், ‘‘வைகை ஆற்றின் கரையோரம் தடுப்புச் சுவர் கட்டுவதால் தடுப்பணையில் தண்ணீர் தேங்கினால் சுவருக்கு பாதிப்பு வரும் என்பதால், ஷட்டர் வழியாக தண்ணீர் திறந்துவிடப் பட்டது,’’ என்றார்.

தமிழ்நாடு நவீன வழிச்சாலை திட்டப் பொறியாளர் ஏ.சி.காமராஜ் கூறியதாவது: தடுப்பணைகள் கட்டினால் குறைந்த அளவு தண்ணீரையே நம்மால் தேக்க முடியும். மேலும் தடுப்பணைகள் என்பது தற்காலிகத் தீர்வுதான். நவீன நீர்வழிச்சாலை திட்டம் மூலம் தேக்கும் நீரில் கால் பங்கு நீரைக் கூட இதில் தேக்க முடியாது.

ஆற்றில் வெள்ளம் வரும்போது மட்டுமே கூடுதலாக தண்ணீர் வரத்து இருக்கும். மேலும், ஏற்கனவே கட்டப்பட்ட பல்வேறு தடுப்பணைகள் பெரும் பாலும் வறண்டே கிடக்கின்றன. நவீன நீர்வழிச் சாலை திட்டம் மூலம் எந்த ஆற்றில் வெள்ளம் வந்தாலும் அதனைத் தேக்கி வறண்ட ஆற்றுக்கு திருப்பி விடலாம். இதன் மூலம் அனைத்து ஆறுகளும் ஆண்டு முழுவதும் நீரோட்டத்துடன் ஜீவ நதிகளாக மாறும். தமிழக அரசு தடுப்பணைகளுக்கு போல், இந்த திட்டத்திற்கு ரூ. 1000 கோடி செலவிட வேண்டியதில்லை. நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்துக்கு ரூ. 500 கோடி தேவையில்லை. ஏனென்றால், திட்டத்தை ஆய்வு செய்து அனுப்பினால் மத்திய அரசு தேசிய திட்டமாக அறிவித்து 90 சதவீதம் நிதியை மானியமாக வழங்கத் தயாராக உள்ளது. மேலும் இத்திட்டத்தில் மின்சாரமும் கிடைக்கும் என்பதால் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்யும். எனவே இத்திட்டத்தை “ ஜீரோ பட்ஜெட்டில் ” நிறைவேற்றிவிட முடியும், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x