Published : 04 Dec 2019 03:22 PM
Last Updated : 04 Dec 2019 03:22 PM
16 கோரிக்கைகள் அடங்கிய ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திமுக எம்.பி.க்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினர்.
மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி, மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா ஆகியோர் இன்று (டிச.4) பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தனர். அப்போது அவர்கள், திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய, தமிழக நலன்கள் மற்றும் இலங்கை வாழ் தமிழர்களின் நலன் குறித்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை மோடியிடம் அளித்தனர். அத்துடன், கருணாநிதி எழுதிய 'குறளோவியம்' நூலையும், முரசொலி வெளியிட்ட 'நிறைந்து வாழும் கலைஞர் நினைவு மலர் 2019' ஆகியவற்றையும் பிரதமர் மோடியிடம் அளித்தனர்.
மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள்:
மாநில உரிமைகளை மீட்க அரசியல் சட்டத்தைத் திருத்திடுக
கூட்டாட்சித் தத்துவத்தை உண்மையில் பிரதிபலிக்கும் வகையில் மாநிலங்களுக்கு உரிமையளிக்க, அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.
நீட் தேர்வு
மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்சினைகள்:
i) மேகேதாட்டு அணை
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிடுவது 16.2.2018 அன்று அளிக்கப்பட்ட காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், காவிரி நதி நீர் பங்கீட்டு விதிமுறைகளையும் ஒட்டுமொத்தமாக மீறும் செயலாகும். ஆகவே மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக மாநில அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு உத்தரவிட வேண்டும்.
ii) முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த 27.2.2006 மற்றும் 7.5.2014 ஆகிய தேதிகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்தி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக அதிகரித்திட வேண்டும்.
iii) தென் பெண்ணையாறு திட்டங்கள்
கர்நாடக அரசு, தென்பெண்ணையாற்றின் குறுக்கே 5 நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அந்தப் பணிகளை உடனே நிறுத்த கர்நாடக அரசுக்கு உத்தரவிடுவதுடன், மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீட்டின்படி, தமிழ்நாட்டின் நதி நீர் உரிமையை மதித்து நடக்குமாறு கர்நாடக மாநில அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
புதிய கல்விக் கொள்கை -2019
புதிய கல்விக் கொள்கை-2019 என்பது மாநிலங்களின் உரிமையில் தேவையற்ற ஒரு தலையீடு மட்டுமின்றி- அரசியல் சட்டத்தையே சிதைத்திடும் வகையில் உள்ளது. மத்திய- மாநில அரசுகளுக்கு இடையில் நிலவ வேண்டிய உண்மையான கூட்டுறவு கூட்டாட்சிக்கு மதிப்பளித்து இந்தப் புதிய கல்விக் கொள்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வந்து மாநிலத்திற்கு ஏற்ற ஆற்றல் மிக்க கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை மாநிலங்களே நிறைவேற்றிடுவதற்கு வழி விட வேண்டும்.
மத்திய அரசுப் பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 90 சதவீத இட ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் 90 சதவீதம் தமிழக இளைஞர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தித் திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்.
இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரித்திடுக
மண்டல் ஆணையப் பரிந்துரையின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அளிக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடு மத்திய அரசு அலுவலகங்களில் துரதிர்ஷ்டவசமாக முழுமையாகவும், முறையாகவும் செயல்படுத்தப்படவில்லை. இதனால் மத்திய அரசின் ஒவ்வொரு துறையிலும் 27 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டிய காலிப் பணியிடங்கள் ஏராளமாக இருக்கின்றன.
2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் பொதுத் தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்திருக்க வேண்டிய 5,530 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
ஆகவே பொதுத் தொகுப்புக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக கடைப்பிடிக்க ஆணையிட வேண்டும். 27 சதவீத இட ஒதுக்கீட்டினை எவ்விதத் தொய்வுமின்றி செயல்படுத்துவதுடன், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரித்திட வேண்டும். மத்திய அரசுப் பணிகளிலும், கல்வியிலும் 27 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்துள்ள விதம் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும்.
எய்ம்ஸ் மருத்துவமனயை விரைந்து அமைத்திடுக
தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளை மேலும் தாமதம் செய்யாமல் விரைவுபடுத்தி முடித்திட வேண்டும்.
கடல்நீரைக் குடிநீராக்கும் புதிய திட்டங்களை அமைத்திடுக
தமிழ்நாட்டில் கடல் நீரைக் குடிநீராக்கும் புதிய திட்டங்களை நிறைவேற்றிட நிதியுதவி அளித்திட வேண்டும்.
நதிநீர் இணைப்பு
மாநிலத்திற்குள் ஓடும் நதிகளை இணைக்க அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்திட வேண்டும்.
தமிழ் மொழியின் முக்கியத்துவம்
தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக உடனே அறிவித்து தமிழுக்கு உரிய அந்தஸ்தை அளிக்க வேண்டும்.
மத்திய அரசு அலுவலகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இந்திக்கு அளிக்கப்படும் முன்னுரிமை அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளைப் பேசும் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. இந்தப் போக்கினை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களின் கடிதத் தொடர்புகள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மற்றும் இந்திய சட்ட ஆணையத்தின் நடவடிக்கைகள் அனைத்திலும் தமிழ் மற்றும் அரசியல் சட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளைப் பயன்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
சேலம் உருக்கு ஆலையை தனியார் மயமாக்குதலை நிறுத்துக
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும், சேலம் உருக்காலை தனியார் மயமாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களைக் கைவிடுக
ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம், சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களைக் கைவிட வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலைய இணைய தளம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக மக்களுக்கு எழுந்துள்ள அச்சத்தைப் போக்கி, அந்த மக்களுக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றிடுக
மகளிருக்கு சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவினை மேலும் தாமதமின்றி உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.
ஈழத்தமிழர்களையும், அவர்களின் உரிமைகளையும் பாதுகாத்திடுக
ஈழத் தமிழர்கள் தாங்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு பெற்று கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு வழி வகுக்கும் வகையில்- ஈழத்தமிழர்களையும், அவர்களின் அரசியல் சட்ட உரிமைகளையும் பாதுகாத்திட மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இலங்கையில் புதிய அரசு அமைந்ததில் இருந்து இந்திய மீனவர்கள் மீது அதிகரித்துள்ள தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பதினைந்தாவது நிதி ஆணையம்
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், நிதி சுதந்திரத்திற்கும் ஊறு விளைவிக்கும் விதத்தில் 15 ஆவது நிதி ஆணையத்தின் “அதிகார வரம்பு” நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே “அதிகார வரம்பினை” கீழ்க்கண்டவாறு மாற்றியமைக்க வேண்டும்:.
i) மத்திய நிதியினை முறையாக வழங்குவதற்கு மனித மேம்பாட்டு அளவுகோல் அல்லது தனிநபர் உற்பத்தி போன்ற உறுதியான நடவடிக்கைகள் போன்ற முக்கிய ஊக்கமளிக்கும் காரணிகள் மூலம் எதிர்கால நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டும்.
ii) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தியின் பங்களிப்பு விகிதாச்சாரத்தின் அடிப்படையிலோ அல்லது மத்திய வரி வருவாய்க்கான பங்களிப்பு விகிதாச்சாரத்தின் அடிப்படையிலோ ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீடு விகிதத்திற்கான குறைந்தபட்ச வரம்பை நிச்சயிப்பது.
iii) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பு விகிதாச்சாரத்தின் அடிப்படையிலோ அல்லது மத்திய வரி வருவாய்க்கான பங்களிப்பு விகிதாச்சாரத்தின் அடிப்படையிலோ ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீடு விகிதத்திற்கான அதிகபட்ச வரம்பை நிச்சயிப்பது. சமமான பங்கு தொடர்பான கவலைகளை முழுமையாகத் தீர்ப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.
நிலுவையில் உள்ள மத்திய நிதியை வழங்கிடுக
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையில் தமிழ்நாட்டுக்கு நிலுவையில் உள்ள 7,825 கோடி ரூபாய் நிதியினை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்த உதவிட வேண்டும்.
ஆகவே, தமிழ்நாட்டின் மீது அக்கறை செலுத்தும் விதத்தில் மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் தயவுகூர்ந்து நேர்மறைக் கண்ணோட்டத்துடன் பரிசீலித்து கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் நலனைப் பாதுகாத்திடும் வகையில் நிறைவேற்றிட வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT